ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் களைக்கொல்லி தாங்குத் திறனுடைய பருத்தியான (Herbicide tolerant – HT) BG-III பருத்தியின் சட்ட விரோத மற்றும் அங்கீகரிக்கப்படாத சாகுபடியை விசாரிப்பதற்காக மத்திய அரசு ஓர் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
இதற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயிரி தொழில்நுட்பத் துறை (Department of Biotechnology) கள ஆய்வு மற்றும் அறிவியல்பூர்வ மதிப்பீட்டுக் குழுவை (Field Inspection and Scientific Evaluation Committee -FISEC) அமைத்துள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மரபுப் பொறியியல் மதிப்பீட்டுக்குழுவால் (Genetic Engineering Approval Committee - GEAC) இதுவரை HT பருத்தியின் சாகுபடிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அனுமதிக்கப்படாத HT பருத்தியின் வணிக ரீதியிலான உற்பத்தி, விற்பனை, சாகுபடி, மற்றும் அதன் விதை உற்பத்தி ஆகியவை 1968 ஆம் ஆண்டின் விதை விதிகள் (Seed Rules 1968) மற்றும் 1966-ன் விதைகள் சட்டம் (Seed Act 1966), 1983-ன் விதைகள் கட்டுப்பாட்டு உத்தரவு, 1986-ன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1989ன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள், ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரியக் குற்றமாகும்.
HT பருத்தியானது BG-III பருத்தி எனவும் அழைக்கப்படுகின்றது.
BT பருத்தியில் (Bt Cotton) மேற்கொள்ளப்பட்ட ஓர் படைப்பாக்கமே BG-III பருத்தியாகும். இது Roundup Ready மற்றும் Roundup Flex (RRF) ஜீன்களைக் கொண்டுள்ளது.