கிராமப்புற சுகாதாரத்திற்கான தூய்மை இந்தியா விருது – தமிழ்நாடு
October 4 , 2019 1935 days 993 0
மத்திய அரசின் கிராமப்புறத் தூய்மைக் கணக்கெடுப்பிற்குப் பிறகு கிராமப்புற சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழ்நாடு 11வது இடத்தில் இருந்தது. தற்பொழுது இந்தக் கணக்கெடுப்பில் இது முதலிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும்.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரான எஸ்.பி. வேலுமணி மாநில அரசின் சார்பாக பிரதமர் மோடியிடமிருந்து இந்த விருதைப் பெற்றார்.
இந்த ஆண்டில் ஸ்வச்தா கணக்கெடுப்பானது நாடு முழுவதும் 17,200 கிராமங்களிலும் 690 மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது.
மக்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்கள், சுயாதீன மதிப்பீட்டாளர்களின் கண்காணிப்பு முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
தூய்மை இந்தியா திட்டத்தின் (Swachh Bharat Mission - SBM) வலைத் தளத்தின் படி, தமிழ்நாடானது 100 சதவிகிதம் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற (Open Defecation Free - ODF) மாநிலம் என்ற நிலையை அடைந்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி தூய்மை இந்தியா என்ற திட்டத்தை அறிவித்ததை அடுத்து மாநிலத்தில் 53.46 லட்சத்துக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக அந்த இணையதளத்தில் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.