பிரதமர் நரேந்திர மோடி 300 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட கிஷன்கங்கா நீர்மின் ஆற்றல் உற்பத்தி திட்டத்தை (Kishanganga Hydroelectric Project) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா மாவட்டத்தில் துவக்கி வைத்துள்ளார்.
மேலும் பிரதமர் 1000 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட பகல் துல் ஆற்றல் உற்பத்தி திட்டத்திற்கும் (Pakal Dul Power Project) அடிக்கல்லை நாட்டியுள்ளார்.
பகல் துல் அணையானது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிஷ்த்வார் மாவட்டத்தில் செனாப் நதியின் (Chenab River) துணை நதியான மருசதார் நதியின் (Marusadar River) மீது கட்டப்படுவதற்காக முன்மொழியப்பட்டுள்ள கான்கிரிட் முகப்புடைய பாறைக் கட்டமைவு உடைய அணையாகும் (Concrete-face rock-fill dam-CFRD).
இந்த 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டமானது கட்டமைக்கப்பட்டால் இதுவே ஜம்மு காஷ்மீரின் மிகப்பெரிய நீர்மின் உற்பத்தி திட்டமாகும். மேலும் இதுவே ஜம்மு காஷ்மீரின் மின் உற்பத்திக்கான முதல் நீர் சேகரிப்புத் திட்டமாகும்.
கிஷன்கங்கா நீர்மின் உற்பத்தித் திட்டமானது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பந்திபோரா மாவட்டத்தில் ஜீலம் நதிப் படுகையில் கிஷன்கங்கா நதியின் மீது கட்டப்பட்டுள்ள ஓர் 37 மீட்டர் உயர காங்கிரிட் முகப்புடைய பாறைக் கட்டமைவு உடைய அணையாகும்.