சோலார் மின் உற்பத்தியை (Solar Farming) மேற்கொள்வதற்கு விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக கிசான் உர்ஜா சுரக்ஷா இவம் உத்தான் மஹாபியான் (Kisan Urja Suraksha evam Utthaan Mahaabhiyan-KUSUM) என்ற திட்டத்தை துவங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பரவலாக்கப்பட்ட சோலார் மின் உற்பத்தி மூலம் ஐந்தாண்டுகளில் 28250 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
நாடு முழுவதும் விவசாயிகளுடைய தரிசு நிலத்தில் 10000 மெகாவாட் சோலார் மின்உற்பத்தி கட்டமைப்புகளை நிறுவுவதும், வேளாண்மைக்கான பயன்பாட்டிற்காக 17.5 லட்சம் சோலார் பம்புகளை வழங்குவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்
விவசாயிகளுடைய தரிசு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் கட்டமைப்பினால் உற்பத்தி செய்யப்படுகின்ற கூடுதல் மின்சாரத்தை, விவசாயிகள் அரசின் மின் வழங்கல் கட்டமைப்பிற்கு (Power Grid) விற்பனை செய்ய வாய்ப்பினை வழங்கி, அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு சோலார் பம்புகளுக்காக 60 சதவீதம் மானியம் வழங்கப்படும். இது மத்திய மற்றும் மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படும். 30 சதவீத தொகையானது வங்கிக் கடன் மூலமாக தரப்படும். மீதியுள்ள 10 சதவீதத்தை விவசாயிகள் அளிக்க வேண்டும்.