குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு
April 15 , 2025 7 days 71 0
ஆளுநர் பரிந்துரைத்த மாநில அரசின் மசோதாக்களுக்கு தனது ஒப்புதலை அளிப்பதா இல்லையா என்பதை முடிவு செய்ய குடியரசுத் தலைவருக்கு மூன்று மாதங்கள் காலக் கெடுவை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.
ஆளுநர் மசோதாவைக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்த நாளிலிருந்து இந்த எண்ணிக்கை தொடங்குகிறது.
இந்தக் காலக்கெடுவுக்கு மேல் வேறு ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், பொருத்தமான காரணங்களைப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட மாநில அரசிற்கு உடன் அவர் அதனைத் தெரிவிக்க வேண்டும்.
மாநில அரசுகள் அந்த மசோதாக்கள் குறித்து மத்திய அரசிடமிருந்து வரும் கேள்விகள் அல்லது பரிந்துரைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
குடியரசுத் தலைவர் செயலறிவு நுட்பம் சார்ந்த நடவடிக்கையாக, அரசியலமைப்புக்கு முரணானதாகக் கருதப்படும் அடிப்படையில், ஆளுநர் பரிசீலனைக்காக ஒதுக்கிய அந்த மசோதாக்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் குடியரசுத் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றால், குடியரசுத் தலைவருக்கு எதிராக மாநில அரசு நீதிப்பேராணை மனு ஒன்றைத் தாக்கல் செய்யலாம்.
201வது சரத்தின் கீழ், மாநில அரசின் மசோதா மீது குடியரசுத் தலைவர் முழுமையான தடையுறுத்து அதிகாரத்தினைப் பயன்படுத்த முடியாது என்பதோடு இந்தத் தீர்ப்பு ஒரு 'காலாவதியான' மசோதாவையும் மீட்டெடுப்பதற்கு வழி வகுக்கும்.
அரசியலமைப்பின் படி, ஒரு மசோதா திருப்பி அனுப்பப்பட்டவுடன், அல்லது குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் அந்தச் சட்டம் காலாவதியாகிவிடும்.
சட்டமன்றம் விரும்பிய படி, பரிந்துரைக்கப்பட்ட சில திருத்தங்களுடன் அல்லது எந்த திருத்தமும் இல்லாமல், அதை நிறைவேற்றுவதற்காக என்று அதைச் சட்டமன்றத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தலாம்.
ஆனால் கடந்த ஏப்ரல் 08 ஆம் தேதியன்று வழங்கப்பட்ட தீர்ப்பு இந்த காரணத்தைக் கருத்தில் கொள்ளவில்லை.