குடியரசு துணைத் தலைவராக இருக்கும் ஹமீது அன்சாரி, அப்பதவியை கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளாக வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து அந்தப் பதவிக்கு வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
இந்தத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக வெங்கய்யநாயுடுவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபால கிருஷ்ண காந்தி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு துணைத் தலைவர் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்?
குடியரசு துணைத்தலைவர் தேர்தல் சம்பந்தப்பட்ட நடைமுறைகள் குடியரசுத் தலைவர் தேர்தலை மிகவும் ஒத்திருக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் டெல்லி மற்றும் புதுச்சேரி உட்பட அனைத்து மாநிலங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பில் பங்கேற்கின்றனர்.
ஆனால் குடியரசு துணைத் தலைவர் தேர்தலின் இரகசிய வாக்கெடுப்பில் நாடாளுமன்றத்தின் மக்களவை (Lok Sabha) மற்றும் மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்கின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்தை குறிக்க அதற்காக பிரத்யேகமான முறையில் வடிவமைக்கப்பட்ட பேனாக்களை பயன்படுத்துகின்றனர் (வேறு வகை பேனாக்களைக் கொண்டு குறிக்கப்பட்ட வாக்குகள் நிராகரிக்கப்படும்).
குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
குறைந்தது 35 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
மாநிலங்களவை உறுப்பினராக தகுதி பெற்றிருக்க வேண்டும்.
ஒரு வேட்பாளரின் வேட்பு மனுவை குறைந்தபட்சம் 20 வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 20 வாக்காளர்கள் வழிமொழிய வேண்டும்.
மேலும் ஒவ்வொரு வேட்பாளரிடமும் 15,000 ரூபாய் வைப்புத் தொகையாகப் பெறப்படும்.