இந்தியா மற்றும் லிதுவேனியாவிற்கு இடையேயான குற்றவாளிகளை ஒப்படைக்கும் உடன்படிக்கையை கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தீவிரவாதிகள், பொருளாதாரக் குற்றவாளிகள் மற்றும் பிற குற்றவாளிகளை நாடு கடத்த தேவையான பரஸ்பர சட்ட கட்டமைப்பை இந்த ஒப்பந்தம் வழங்கும்.
இதுவரை இந்தியா 37 நாடுகளுடன் குற்றவாளிகளை ஒப்படைக்கும் உடன்படிக்கையையும் ,8 நாடுகளுடன் குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஏற்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகளை ஒப்படைக்கும் உடன்படிக்கை
குற்றவாளிகளை ஒப்படைக்கும் உடன்படிக்கை என்பது இரு நாடுகளின் பரஸ்பர ஒப்புதலுடன் கையெழுத்திடப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட சரணடைப்பு சார்ந்த ஓர் ஒப்பந்தமாகும்.
குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஏற்பாடு
குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஏற்பாடு என்பது இரு நாடுகளுக்கிடையே குற்றவாளிகளை ஒப்படைக்கும் உடன்படிக்கை இல்லாத நிலையில் உறுதியான பரஸ்பர பரிமாற்ற ஒத்துழைப்புடன் ஓர் சர்வதேச உடன்படிக்கையின் கீழ் மேற்கொள்ளப்படும் ஓர் சரணடைப்பு சார்ந்த ஏற்பாடாகும்.
இந்த ஏற்பாட்டின் கீழ் சரணடைப்பு வேண்டும் குற்றத்தோடு பொருந்தக்கூடிய சர்வதேச உடன்படிக்கையை ஒப்படைப்புக்கான அடிப்படை சட்டமாக கொண்டு இருநாடுகளும் குற்றவாளிகள் ஒப்படைப்பை மேற்கொள்ளும்.
இது அனைத்து வித குற்றங்களுக்கும் பொருந்தாது.
எடுத்துக்காட்டு
இந்தியா மற்றும் இத்தாலி இடையே குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஏற்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் 1988-ஆம் ஆண்டின் போதை பொருட்கள் மற்றும் மூளையின் செயல்பாட்டை பாதிக்கும் மருந்துகளின் சட்டவிரோத வர்த்தகத்திற்கு எதிரான ஐநா உடன்படிக்கையில் (UN Convention Against illicit Trafficking in Narcotic Drags and Psychotropic Substances) கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும் இந்த உடன்படிக்கையை இந்திய அரசு தமது குற்றவாளிகள் ஒப்படைப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.
எனவே இந்த உடன்படிக்கையை அடிப்படை சட்ட மூலமாக கொண்டு போதை பொருள் கடத்தல் குற்றவாளிகளின் சரணடைப்பை இரு நாடுகளும் மேற்கொள்ளலாம்.