தென் கொரியாவின் பியாங்சாங் மாகாணத்தில் 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் பங்கு பெறும் இந்திய தடகள வீரர்களுக்கு ஹர்ஜின்தர் சிங் தலைமை பொறுப்பு வகிக்கவுள்ளார்.
இந்திய பனிக்கால வளைதடியாட்ட (Ice Hockey) சங்கத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றி வரும் ஹர்ஜின்தர் சிங்குக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் இப்பொறுப்பை அளித்துள்ளது.
தென் கொரியா பொறுப்பேற்று நடத்தும் இரண்டாவது ஒலிம்பிக் போட்டி இதுவாகும். முன்னதாக 1988-ஆம் ஆண்டின் கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்றது.
இது ஆசியாவில் நடைபெறும் மூன்றாவது குளிர்கால ஒலிம்பிக் போட்டியாகும். இதற்கு முன் 1972-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் சப்போரோ நகரிலும், 1998-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் நகானோ நகரிலும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இதுவரை நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் 2014-ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியே அதிக பொருட்செலவில் (51 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) நடைபெற்ற ஒலிம்பிக் ஆகும்.