12 வயதிற்குக் குறைவான சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்குவற்கான குற்றவியல் சட்ட திருத்தத்திற்கான அவசரச் சட்டத்திற்கானப் பிரகடனத்திற்கு (Criminal Law (Amendment) Ordinance) மத்திய கேபினேட் அனுமதி அளித்துள்ளது.
இந்த அவசரச் சட்டமானது இந்திய தண்டனைச் சட்டத்தையும் (Indian Penal Code -IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டத்தையும் (Criminal Procedure Code-CrPC), 2012 ஆம் ஆண்டின் பாலியல்குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தையும் (Protection of Children from Sexual Offences - POCSO Act 2012), 1872 ஆம் ஆண்டின் இந்திய சாட்சிச் சட்டத்தையும் (Indian Evidence Act) திருத்தம் செய்ய உள்ளது.
மேலும் இந்த குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கான அவசரச் சட்டம் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau -NCRB) மூலம் பாலியல் குற்றவாளிகளின் சுய விவரங்கள் (profile) மற்றும் தேசிய பாலியல் பலாத்கார நிகழ்வுகளின் தரவுத் தளங்களை (National database) பராமரிப்பதற்கான சட்டக் கூறினையும் கொண்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் பாலியல் பலாத்கார வழக்குகளின் விசாரணை, வழக்கு பின்தொடரல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றிற்காக இத்தரவுகளானது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் தொடர்ந்து பகிரப்படும்.