இந்திய அரசாங்கத்தின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழான இந்த முதன்மை நிகழ்வின் ஆறாவது போட்டியானது சமீபத்தில் நிறைவடைந்தது.
தமிழ்நாடு 2024 ஆம் ஆண்டு கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை (KIYG) சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை ஆகிய நான்கு நகரங்களில் நடத்தியது.
மகாராஷ்டிரா 57 தங்கம், 48 வெள்ளி மற்றும் 53 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றதையடுத்து கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியின் வாகைப் பட்டத்தை வென்றது.
இது மகாராஷ்டிராவின் நான்காவது KIYG பட்டமாகும்.
இந்தப் போட்டியை நடத்திய தமிழ்நாடு மாநிலம் 38 தங்கம், 21 வெள்ளி மற்றும் 39 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்தைப் பெற்றது.
இரண்டு KIYG பட்டங்களை வென்றுள்ள ஹரியானா, 35 தங்கம், 22 வெள்ளி மற்றும் 46 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற KIYG 2024 போட்டிகளில் நடத்தப்பட்ட மொத்தம் 26 விளையாட்டுகளில் மொத்தம் 926 பதக்கங்கள் - 278 தங்கம், 278 வெள்ளி மற்றும் 370 வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் ஸ்குவாஷ் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தினைப் பூர்வீகமாக கொண்ட தற்காப்புக் கலைகளின் ஒரு வடிவமான சிலம்பம், ஒரு செயல்விளக்க விளையாட்டாக அதில் இடம் பெற்றது.
தெலுங்கானாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை விருத்தி அகர்வால் ஐந்து தனிநபர் தங்கப் பதக்கங்களை வென்று இதில் முதல் இடத்தினைப் பெற்றார்.