புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை தயாரிக்க கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் பணிக்காலத்தை மூன்றாவது முறையாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நீட்டித்துள்ளது.
இக்குழு தனது பணிக்கால நீட்டிப்புக்கு முன்னால் ஜூன் 30ஆம் தேதி அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்திருக்க வேண்டும். பணிக்கால நீட்டிப்புக்குப் பின்னால் ஆகஸ்ட் 31ஆம் தேதி இக்குழு அறிக்கையை சமர்ப்பிக்கும்.
தற்பொழுதுள்ள தேசியக் கல்விக் கொள்கையானது 1986ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இக்கொள்கை 1992ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது.
கஸ்தூரி ரங்கனைத் தவிர, கணிதவியலாளர் மஞ்சுள் பார்கவா உள்பட 8 உறுப்பினர்கள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
ஸ்மிருதி இராணி மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த போது முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குழுவின் அறிக்கையையும் ஆராய்ந்து வரைவு அறிக்கையை சமர்ப்பிக்கும்.