சந்துரு குழுவின் மையப்படுத்தப்பட்ட சமையலறைக்கான பரிந்துரை
August 27 , 2024 88 days 198 0
நீதிபதி K. சந்துரு குழுவின் பரிந்துரைகளில் ஒன்றான பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவைப் பள்ளி வளாகத்திலேயே சமைப்பதற்குப் பதிலாக மையப்படுத்தப் பட்ட சமையலறைகளில் சமைக்க வேண்டும் என்ற பரிந்துரை குறித்து நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் சாதியைக் குறிக்கும் வகையில் வண்ண மணிக் கட்டுக் கயிறுகள், மோதிரம் அல்லது நெற்றித் திலகக் குறிகளை அணிவதைத் தடை செய்யுமாறும் பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி முன்னொட்டுகளை நீக்குமாறும் தமிழக அரசிற்கு இக்குழுவின் அறிக்கையானது பரிந்துரைத்தது.
ஒவ்வொரு பள்ளியிலும் சமையலறைகளை நிறுவாமல், அதன் செயல்பாட்டிற்குத் தேவையான போதுமான பணியாளர்களுடன் கூடிய தொகுதி அளவில் மையப் படுத்தப் பட்டச் சமையலறைகளை நிறுவுதல் மற்றும் பள்ளிகளின் மதிய உணவு மையங்களுடன் இணைக்கப்பட்ட உணவு விநியோக வலையமைப்புகளை நிறுவல் ஆகியவை இந்த அறிக்கையின் பரிந்துரையில் அடங்கும்.
சில பகுதிகளில், மையப்படுத்தப் பட்ட சமையலறைகளின் செயல்பாடு, குறிப்பாக கிராமப் புறங்களில் அதன் செயல்பாடு முறையாக இல்லை.
பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள மதிய உணவு மையங்களில் உணவு சமைக்கப் படும் போது, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் சமையல் நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியும் என்பதோடு அந்தச் செயல்முறையானது உத்திரவாதம் மிக்கதாக இருக்கும்.
ஆனால் மையப்படுத்தப்பட்டச் சமையலறைகளில், பொதுப் பொறுப்புக் கூறலுக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
பள்ளிகளில் மதிய உணவு மையங்களில் உணவு சமைப்பது குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குகிறது.
மதிய உணவுச் சமையல் பணியாளர்களில் சுமார் 27% பேர் பட்டியலிடப்பட்டச் சாதி அல்லது பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.