ஒரு அரிய நடவடிக்கையாக, தமிழக அரசானது ஒரு அரசாங்க உத்தரவை (Government Order) ஒரு நிர்வாக வழி உத்தரவாக பிறப்பித்துள்ளது.
இளங்கலை மருத்துவப் படிப்பிற்கானச் சேர்க்கைகளில் நீட் தேர்வில் தகுதி பெற்ற மாநில அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு இது 7.5% என்ற அளவில் கிடைமட்ட இட ஒதுக்கீட்டை அளிக்கிறது.
2020-2021 கல்வியாண்டில் இருந்து 69% இடஒதுக்கீட்டிற்குள் தமிழக மாநிலத்தில் பின்பற்றப்படும் செங்குத்து இடஒதுக்கீட்டின் ஒவ்வொரு பிரிவிலும் மேற்கண்ட கிடைமட்ட இட ஒதுக்கீடு வழங்கப் படும்.
மாநில அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு இந்தச் சலுகைகள் கிடைக்கும்.
எனினும் இந்த ஒதுக்கீட்டிற்கான மசோதா ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் முன்பு அவரது ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்தது.
இந்த மசோதா செப்டம்பர் 15 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
எனினும் மாநில அரசாங்கத்தால் அரசாங்க உத்தரவு வழங்கப்பட்ட பின்னர் ஆளுநர் அந்த மசோதாவுக்குத் தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
162வது சரத்தின் கீழ், ஆளுநரின் முடிவு ஒரு விவகாரத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் நிர்வாக அதிகாரமானது சட்டமன்ற அதிகாரத்துடன் இணைந்துச் செயல்படுவதாக மாநில அரசு குறிப்பிட்டுள்ளது.
அரசாங்க ஒதுக்கீடானதுஅரசியலமைப்பின் 14 மற்றும் 15வது சரத்துகளை மீறவில்லை என்று மாநில அரசானது தனது அரசாங்க உத்தரவில் கூறி உள்ளது.
ஓய்வு பெற்ற மதராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் அவர்களின் தலைமையிலான ஒரு குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீட்டு முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது.