உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய தொழுநோய் நிகழ்வுகள் கண்டறியப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் (World Health Organization – WHO) கூறியுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட நிகழ்வுகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன.
2017 ஆம் ஆண்டில் புதிதாக கண்டறியப்பட்ட தொழுநோய் நிகழ்வுகளில் இந்தியாவின் பங்களிப்பு 60 சதவிகிதமாகும். மொத்தம் கண்டறியப்பட்ட 2.10 லட்சம் நிகழ்வுகளில் இந்தியாவின் பங்கு 1.26 இலட்சமாகும்.
2008 ஆம் ஆண்டு முதல் புதிய தொழுநோய் நிகழ்வுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை தீடிரென உயர்ந்தது. இந்த காலகட்டத்தில் இந்தியா மற்றும் உலகின் போக்காக இது இருந்தது.
மேலும் இந்த நோய் ஆரம்ப காலத்தில் முழுவதுமாக கண்டறியப்பட்டால் 100 சதவிகிதம் குணப்படுத்தக் கூடியது என்று WHO கூறியுள்ளது.
தொழுநோய் என்பது தோல், புற நரம்புகள், மேல் சுவாசக் குழாயின் மேற்பரப்பு மற்றும் கண்கள் ஆகியவற்றைப் பாதிக்கக்கூடிய நாள்பட்ட தொற்று நோயாகும்.