மத்திய அமைச்சரவை சலுகை நிதித் திட்டத்தினை 2018-2023 ஆகிய 5 வருடங்களுக்கு நீட்டித்து ஒப்புதல் அளித்துள்ளது. இது சலுகை நிதித் திட்டத்தின் முதலாவது நீட்டிப்பாகும். (CFS-Concessional Financing Scheme).
வெளிநாடுகளில் பயன்படத்தக்க வகையில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புத் திட்டங்களை இந்திய நிறுவனங்கள் ஏலத்தில் எடுப்பதை ஆதரிப்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டது.
நிறுவனத்தின் உரிமையாளர் மட்டுமின்றி எந்த ஒரு இந்திய நிறுவனமும் இத்திட்டத்தில் பங்குபெற்று பயனடைந்திட இத்திட்டம் தாராள மயமாக்கப்பட்டுள்ளது.
சலுகை நிதித் திட்டத்தின் கீழ் இந்தியாவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட திட்டங்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் தேர்ந்தெடுக்கும். பின்னர், வெளியுறவு அமைச்சகம் இதை பொருளாதார விவகாரங்களுக்கான துறைக்கு அனுப்பி வைக்கும்.
முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான திட்டங்கள் இச்சலுகை நிதியைப் பெற்றிட அவை வகை வகையாகப் பிரிக்கப்பட்டு பொருளாதார விவகாரங்கள் துறைக்கான செயலாளர் தலைமையிலான குழுவால் அதற்கான முடிவு எடுக்கப்படும்.
இக்குழுவில் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் உறுப்பினராக இருப்பார்.
தற்பொழுது இத்திட்டம் எக்ஸிம் (EXIM Bank) வங்கி மூலம் செயல்படுத்தப்படுகிறது. அவ்வங்கி சலுகை நிதி அளிப்பதற்காக சந்தையில் இருந்து நிதியை உருவாக்கும்.
மத்திய அரசாங்கம் எதிர் உத்தரவாதம் மற்றும் 2 சதவீத வட்டி சமநிலை ஆகிய உதவிகளை எக்ஸிம் வங்கிக்கு அளிக்கும்.
LIBOR (The London Inter-bank Offered Rate) 6 மாதத்திற்கான சராசரி + 100 புள்ளிகளுக்கு மேல் இல்லாமல் கடன் உதவியை எக்ஸிம் வங்கி (EXIM BANK) நீட்டிக்கலாம். கடனைத் திருப்பிச் செலுத்துதல் ஆனது வெளிநாட்டு அரசாங்கத்தினால் உத்தரவாதம் அளிக்கப்படும்.