2010 ஆம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதியன்று ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்று எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் (Chennai Unified Metropolitan Transport Authority- CUMTA) சட்டமும் அதனோடு தொடர்புடைய விதிமுறைகளும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைமை நகரத் திட்டமிடும் அதிகாரி (போக்குவரத்து) இந்த சென்னை ஒருங்கிணைந்தப் பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்படுவார். அவரது கட்டுப்பாட்டின் கீழ் இந்த குழுமம் செயல்படும்.
போக்குவரத்துத் துறையில் நுட்பம் வாய்ந்தவர், நகரப் போக்குவரத்துத் துறையில் திட்டமிடுதல், மேலாண்மை, செயல்பாடுகள், இயந்திரவியல் பொருளாதாரம் மற்றும் அது தொடர்பான விவகாரங்களில் அனுபவமும் அறிவும் கொண்ட நிபுணர் ஆகியோர் இக்குழுவில் அரசால் நியமிக்கப்படுவர்.