இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தைச் சேர்ந்த தற்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் சோழவரம் விமான தளத்தில் தனது முதலாவது கிழக்குக் கடற்கரையோர வான் கண்காணிப்பு மையத்தை இந்திய விமானப் படை அமைக்கிறது.
இது செயல்பாட்டிற்கு வந்தால் சோழவரத்தில் உள்ள வான் கண்காணிப்பு மையமானது தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய 2500 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கடற்கரையைப் பாதுகாப்பதற்கு விமானப் படைக்கு உதவிடும்.
இந்திய விமானப் படையானது இந்த மையத்தில் சில போர் வானூர்திகளை நிலை நிறுத்தவிருக்கிறது. இது போயிங் பி8ஐ-யின் (P8I) மூலம் கண்காணிப்பை மேற்கொள்கின்ற அரக்கோணத்தில் உள்ள இந்தியக் கடற்படை நிலையமான ஐஎன்எஸ் ராஜாளி என்ற தளத்திற்கு வலு சேர்த்திடும்.
இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் பிராந்திய இணைப்புத் திட்டத்தின் (UDAN) கீழ் சோழவரத்தில் ஒரு சிறிய விமான தளம் மேம்படுத்தப்பட இருக்கின்றது.
சோழவரம் விமானத் தளமானது இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது.