CITES வர்த்தக தரவுத்தளமானது, இந்தியக் காடுகளில் இருந்து செம்மரம் பறிமுதல், கையகப் படுத்துதல் மற்றும் தொகுப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டது தொடர்பான 28 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது.
இந்தச் சரக்குகள் 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை சீனா (53.5%), ஹாங்காங் (25.0%), சிங்கப்பூர் (17.8%) மற்றும் அமெரிக்கா (3.5%) ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
செம்மரம் அல்லது ப்டெரோகார்பஸ் சாண்டலினஸ், அல்லது சிவப்புச் சந்தன மரம், இந்தியாவின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே பரவிக் காணப்படும் ஒரு உள்நாட்டு மர இனமாகும்.
"செம்மரம்: சட்டவிரோத வன உயிரிகள் வர்த்தகத்தில் இந்தியாவின் செம்மரக் கடத்தல் பற்றிய உண்மைத் தகவல் அறிக்கை" என்ற தலைப்பிலான அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
இந்த அறிக்கையின்படி, 13,618 டன்களுக்கும் அதிகமான செம்மரங்களை இறக்குமதி செய்ததுடன் சீனா முதலிடத்திலும், ஹாங்காங் (5,215 டன்கள்) மற்றும் சிங்கப்பூர் (216 டன்கள்) ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
அழிந்து வரும் வன விலங்குகள் மற்றும் தாவர இனங்களில் மேற்கொள்ளப்படும் சர்வதேச வர்த்தகம் தொடர்பான உடன்படிக்கை (CITES) என்பது அரசாங்கங்களுக்கு இடையிலான ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் சார்ந்த பொருட்களில் மேற்கொள்ளப்படும் சர்வதேச வர்த்தகமானது, உயிரினங்களின் உயிர்வாழ்வை அச்சுறுத்துவதில்லை என்பதை உறுதி செய்வதே இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும்.