ஹைதராபாத் நகரில் சர்வதேச செயல்பாட்டு கடலியல் பயிற்சி மையத்தை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது யுனெஸ்கோ நிறுவனத்தின் இரண்டாம் வகை மையங்களுள் (C2C) ஒன்றாக அங்கீகரிக்கப்படும்.
இதுவரை யுனெஸ்கோ நிறுவனம் உலகெங்கிலும் 94 சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான மையங்களை இரண்டாம் வகை யுனெஸ்கோ மையங்களாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் அமையவுள்ள ITCOO மையத்தின் நோக்கமானது இந்திய பெருங்கடல் விளிம்பில் (IOR) உள்ள நாடுகள், இந்தியப் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் கடற்கரை ஆப்பிரிக்க நாடுகள், யுனைஸ்கோ கட்டமைப்பின் கீழ் அடங்கும் சிறிய தீவு தேசங்கள் ஆகியவற்றில் திறனை வளர்ப்பதற்காக ஒரு பயிற்சி மையத்தை அமைப்பதாகும்.
செயல்பாட்டு கடலியல் என்பது பல்வேறு துறைகளுக்கு தகவல் சேவைகளை வழங்குவதற்காக திட்டமிட்ட கடல்சார் படிப்புகளை மேற்கொள்வது ஆகும். இந்த ஆய்வானது மீனவர்கள், பேரிடர் மேலாண்மை பணிகள், கப்பல்துறை, கடலோரக் காவல் படை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல் கடந்து அமைந்திருக்கும் நிறுவனங்கள் போன்றவை தங்கள் அன்றாட பணிகளைச் சிறப்பாகச் செயல்படுத்த உதவும்.
இந்த மையமானது திறன்களை வளர்க்கவும், பயிற்சியளிக்கவும், துறை சார்ந்த அறிவுகளைப் பகிரவும், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் உதவும்.
யுனெஸ்கோ நிறுவனத்தின் இரண்டாம் வகை மையம் இந்தியாவில் அமைவது, இந்தியப் பெருங்கடலில் இந்தியா ஒரு முன்னணி நாடாக வெளிப்படுவதற்கு வாய்ப்பளிக்கும்.
இந்த மையமானது நிலையான வளர்ச்சி இலக்கு -14 ஐ (Sustainable Development Goal-14) அடைய இந்தியாவுக்கு உதவும்.
SDG 14: நீரில் வாழும் உயிரினங்கள்: பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் கடல் சார் வளங்களைப் பேணுதலும், வளங்குன்றா வளர்ச்சிக்காக அவற்றை நீடிக்கத்தக்க விதத்தில் பயன்படுத்துதலும்
அனைத்து உயர்ரக தொழில்நுட்ப வசதிகளையும் கொண்ட இந்த மையம் தற்சமயம் ஹைதராபாத் நகரிலுள்ள கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய மையத்தில் இயங்கி வருகிறது.