இந்திய இலக்கியத்திற்கு செழுமையான பங்களிப்பு அளித்தமைக்காக புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் சோப்தி, (92) 2017-ம் ஆண்டிற்கான 53-வது ஞான பீட விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒட்டு மொத்தமாக இந்த பெருமைமிகு விருதைப் பெறும் எட்டாவது பெண்மணி இவர் ஆவார்.
எழுத்துலகில் புதிய நடைகளைப் புகுத்தியமைக்காகவும், தமது படைப்புகளில் தைரியமான கதாபாத்திரங்களை உருவாக்கியமைக்காகவும் அறியப்படும் கிருஷ்ணா சோப்தி, 1925-ம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குஜராத் என்ற நகரில் பிறந்தார்.
இவரது மொழிநடை இந்தி, உருது மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிக் கலவைகளினால் வெகுவாக தாக்கம் பெற்றுள்ளது.
இந்தி அகாடமி விருதுகள், சிரோமன் விருதுகள், மைதிலி சரண் குப்த் விருது, சாகித்ய அகாடமி விருது மற்றும் பத்மபூஷன் போன்ற பல்வேறு சிறப்பு வாய்ந்த விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
ஞானபீடவிருது
ஞானபீட விருது இந்தியாவின் உயரிய இலக்கிய விருது ஆகும்.
அறிவின் இருக்கையில் என்ற பொருளில் சமஸ்கிருத மொழியில் இருந்து ஞான மற்றும் பீடம் என்ற வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற பத்திரிக்கைக் குழுமத்தை சொந்தமாகக் கொண்டிருக்கும் சாஹீ சாந்தி பிரசாத் ஜெயின் குடும்பத்தாரால் அமைக்கப்பட்ட பாரதீய ஞான பீட அறக்கட்டளை மூலம் 1961-ம் ஆண்டிலிருந்து இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது 11 லட்ச ரூபாய் பரிசுத் தொகை, பாராட்டுப் பத்திரம் மற்றும் வெண்கலத்தாலான சரஸ்வதி சிலை ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.