ஒடிசா மாநிலக் கடற்கரையில் டால்பின் கணக்கெடுப்பானது சிலிக்கா மேம்பாட்டு ஆணையத்தால் மேற்கொள்ளப் பட்டது.
146 ஐராவதி டால்பின்கள் இங்கு காணப்பட்டன.
தற்போது, ஐராவதி டால்பின்களின் மொத்த எண்ணிக்கையானது உலகளவில் 7,500க்கும் குறைவாக இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இவற்றில் 6,000 டால்பின்கள் வங்க தேசத்தில் உள்ளன.
உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான டால்பின்களைக் கொண்ட ஒற்றை உப்பங்கழி அல்லது காயல் ஏரியாக சிலிக்கா ஏரி கருதப் படுகின்றது.
ஐராவதி டால்பின் பற்றி
மியான்மரில் உள்ள ஐராவதி ஆற்றில் காணப்படுவதனால் இந்த இனமானது ஐராவதி என்ற அதன் பொதுவான பெயரைப் பெற்றிருந்தாலும், 1866 ஆம் ஆண்டில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள இன்றைய ஆந்திர மாநிலத்தின் விசாகப் பட்டினம் துறைமுகத்தில் காணப்பட்ட ஒரு மாதிரியிலிருந்து இது முதலில் அறியப் பட்டது.
அதன் வீச்சு வங்காள விரிகுடாவிலிருந்து நியூ கினியா மற்றும் பிலிப்பைன்ஸ் வரை நீண்டுள்ளது.
ஐராவதி நதியைத் தவிர, இது இந்தியாவின் கங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் மீகாங் நதியிலும் காணப்படுகின்றது.
இருப்பினும், இது ஒரு உண்மையான நதி வகை டால்பின் அல்ல. மேலும் இது கடற்கரைகளுக்கு அருகிலுள்ள நதி முகத்துவாரங்கள் மற்றும் உப்புநீரில் வாழ விரும்புகின்றது.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் சிவப்புப் பட்டியலில் ஐராவதி டால்பின்கள் ‘பாதிக்கப்படக்கூடிய இனங்கள்’ என்ற நிலையின் கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒடிசா மாநிலத்தின் பூரி, குர்தா மற்றும் கஞ்சம் ஆகிய மாவட்டங்களில் பரவியிருக்கும் சிலிக்கா ஏரியானது இந்தியாவின் மிகப்பெரிய உப்பங்கழி அல்லது காயல் (உப்பு நீர் மற்றும் நன்னீர் கொண்ட கலவை) ஆகும்.
இது வங்காள விரிகுடாவில் பாயும் தயா ஆற்றின் முகப்பில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய கடலோர உப்பங்கழி ஆகும்
இது ராம்சார் மாநாட்டின் கீழ் ‘சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாக’ அறிவிக்கப் பட்டுள்ளது.