அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு பட்டத்துக்கான இறுதிச்சுற்றில், ஸ்பெயினின் ரஃபேல் நடால், தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
நடாலின் கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் இது 16-வது பட்டமாகும். அதேவேளையில், இந்த ஆண்டில் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதற்கு முன்பு பிரெஞ்சு ஓபனை வென்றார். மேலும் இது அவருடைய மூன்றாவது அமெரிக்க ஓபன் பட்டமாகும்.
மகளிர் ஒற்றையர் பிரிவு- ஸ்டீபன்ஸ் சாம்பியன்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், சகநாட்டவரான மேடிசன் கீஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இது அவர் வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
டென்னிஸ் US ஓபன் பற்றி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆனது செயற்கை இழையிலான கடின தரையில் நடத்தப்படும் போட்டியாகும். 1987ம் வருடத்திலிருந்து ஒரு வருடத்தில் நடத்தப்படும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் காலவரிசையில் நான்காவதாக நடத்தப்படும் போட்டி அமெரிக்க ஓபன் போட்டியாகும். காலவரிசையில் நடத்தப்படும் மற்ற மூன்று போட்டிகளாவன: ஆஸ்திரேலியன் ஓபன், பிரஞ்சு ஓபன், விம்பிள்டன். அமெரிக்க ஓபன் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதத்தின் கடைசி திங்கட்கிழமை தொடங்கி செப்டம்பர் வரையில் இரண்டு வார கால அளவிற்கு நடைபெறும்.