தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கான சிறப்பு அனுமதியுடன் (protected area permit) 2018-ஆம் ஆண்டின் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாண்டு காலத்திற்கு நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதிகளுக்கு வெளிநாட்டினர் செல்வதற்கு அனுமதிப்பதற்காக அறுபது ஆண்டுகாலம் பழமையான தடை செய்யப்பட்ட பகுதிகள் அனுமதி விதிகளை (protected area permit regime) மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தியுள்ளது.
இருப்பினும் மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து உட்பட அனைத்து தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கும் (area permit regime) பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் செல்வதற்கான தடை தொடர்ந்து நீடிக்கின்றது.
1958-ஆம் ஆண்டின் வெளிநாட்டவர்கள் [பாதுகாக்கப்பட்ட பகுதிகள்] ஆணையின் படி (Foreigners (Protected Areas) Order, 1958), சில மாநிலங்களின் உட்புற எல்லைக்கும் (Inner line), சர்வதேச எல்லைக்கும் இடையில் இருக்கும் அனைத்து பகுதிகளும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்சமயம், தடை செய்யப்பட்ட பகுதிகள் அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் முழுமையாகவும், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளிலும் உள்ளன.
சிக்கிமின் சில பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகள் பகுதி விதிமுறையின் (protected area regime) கீழும் சில பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி விதிமுறையின் (restricted area regime) கீழும் வருகின்றன.