பல்வேறு சொத்துக் குவிப்பு வழக்குகளுள் ஒன்றில் தமிழக உயர்கல்வி அமைச்சர் K.பொன்முடியை குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8(1)வது பிரிவின் படி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அந்தக் குற்றத்திற்கான தண்டனையாக அபராதம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டு இருந்தால், அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
அதே நேரத்தில், ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏதேனும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளிலிருந்து அவரது முழு சிறைவாசம் முடிந்து விடுதலை செய்யப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகள் வரையிலும் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
தண்டனை நிறுத்தப்படுதல் அல்லது குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அந்த தகுதி நீக்கம் தவிர்க்கப்படும்.
கடந்த 10 ஆண்டுகளில் தகுதி நீக்கத்தை எதிர்கொள்ளும் மூன்றாவது தமிழக சட்ட மன்ற உறுப்பினர் இவர் ஆவார்.
2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் சட்டமன்ற உறுப்பினர் ஜெயலலிதா ஆவார், அவரைத் தொடர்ந்து முன்னாள் விளையாட்டு மற்றும் இளையோர் நலத்துறை அமைச்சர் P. பாலகிருஷ்ணா ரெட்டி தகுதி நீக்கம் (2019) செய்யப்பட்டார்.