மாநிலத்திற்கு தனிக் கொடியை ஏற்படுத்துவது தொடர்பாக கர்நாடகா மாநில அரசினால் அமைக்கப்பட்ட 9 பேர் குழுவானது மாநிலத்திற்கு தனிக் கொடியை ஏற்படுத்த பரிந்துரை வழங்கியுள்ளது.
மேலும் மாநிலத்திற்கு தனிக் கொடியை வடிவமைப்பது மற்றும் அதற்கு சட்ட நிலைப்பாட்டை (Legal Standing) வழங்குவது போன்றவற்றின் மீதும் 9 பேர் குழுவானது தனது அறிக்கையை வழங்கியுள்ளது.
மாநில சின்னமான கண்டபெருண்டாவை (Gandaberunda) மையத்தில் கொண்ட மூவர்ணமுடைய கொடியை இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.
கண்டபெருண்டா என்பது இரு தலையுடைய புராணப் பறவையாகும்.
மூவர்ணத்தில் முதலில் மஞ்சள் நிறமும், இடையில் வெள்ளை நிறமும், கீழ் புறத்தில் சிவப்பு நிறமும் அமைய வேண்டி இக்குழு பரிந்துரை வழங்கியுள்ளது.
மாநில அமைச்சரவையின் அனுமதி கிடைத்தவுடன், கர்நாடக மாநில அரசானது தனி மாநிலக் கொடி தொடர்பான முறையான வேண்டுகோளை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்க உள்ளது.
ஏனெனில் தனி மாநிலக் கொடியை ஏற்படுத்துவதற்கு 2002 ஆம் ஆண்டின் தேசிய கொடிச் சட்டத்தில் (Flag Code 2002) மேற்கொள்ள வேண்டிய திருத்தத்திற்கு, உரிய திருத்த அதிகாரமானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் வரம்பின் கீழ் உள்ளது.
இந்திய அரசியமைப்புச் சட்டத்தில் அதிகாரப்பூர்வ முறையில் மாநிலங்கள் தனி கொடியை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பாக எந்த கூறும் (No Provision) இல்லை.
இருப்பினும் ஜம்மு காஷ்மீர் மட்டுமே தனக்கென தனிக் கொடி வைத்துள்ள இந்திய மாநிலமாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 370–ன் கீழ் சிறப்பு அந்தஸ்தை ஜம்மு காஷ்மீர் பெற்றுள்ளதால் இது சாத்தியமானது. ஜம்மு காஷ்மீர் 2015 ஆம் ஆண்டு தனக்கான தனிக்கொடியை அமலுக்குக் கொண்டுவந்தது.