இந்திய உணவுக் கழகமானது (FCI) அதன் திறந்தநிலைச் சந்தை விற்பனைத் திட்டத்தின் (OMSS) கீழ் மாநிலங்களுக்கு கூடுதல் உணவுத் தானியங்களை வழங்குவதாக இல்லை என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
தமிழ்நாடு பொது வழங்கீட்டுக் கழகமானது (TNCSC), ஒரு மாதத்திற்கு 50,000 முதல் 60,000 டன்கள் வரை கூடுதல் அளவிலான கொள்முதலைச் செய்வதற்காக இந்தியத் தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மற்றும் பிற மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மத்திய அரசானது, தமிழகத்திற்கு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் பொது விநியோகத் திட்டத்திற்கு (PDS) மாதந்தோறும் சுமார் 2.97 லட்சம் டன் அரிசியை ஒதுக்குகிறது.
இந்த அளவை விட கூடுதலாக, மாநிலத்திற்குச் சராசரியாக, மாதத்திற்கு 50,000 டன் முதல் 60,000 டன் வரை அரிசி தேவைப்படுகிறது.
தமிழகத்தில் அரிசியினைப் பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 2.2 கோடிக்கும் அதிகமாக உள்ளனர்.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு இடையில், இது இந்தியத் தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பிடமிருந்து 3 லட்சம் டன்களை கொள்முதல் செய்துள்ளது.
2022-23 ஆம் ஆண்டிற்கான காரீஃப் பருவப் பயிர்களின் சந்தைப்படுத்தல் பருவத்தில், உள்மாநிலத் தேவைகளுக்காக 7 லட்சம் டன்கள் மாநிலத்தினால் தக்க வைக்கப் பட்டது.
தற்போது, மாநிலத்தின் கிடங்குகளில் 5.4 லட்சம் டன் அரிசி கையிருப்பில் உள்ளது.
இது தவிர, அரிசி ஆலைகளில் சுமார் 1.9 லட்சம் டன்கள் கையிருப்பாக உள்ள நிலையில், இவை இறுதியில் பொது விநியோகத் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும்.