TNPSC Thervupettagam

தமிழக அரசு விருதுகள்

August 16 , 2017 2528 days 2608 0
  • பல்வேறு சமூகப் பணிகள், சாதனைகள் செய்வோரைப் பாராட்டி சுதந்திர தினத்தன்று பல்வேறு பெயர்களில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு வழங்கப்பட்ட விருதுகள் விவரம்:
கல்பனா சாவ்லா விருது
  • கழுத்துக்குக் கீழே எந்தவித செயல்பாடுகளும் இல்லாத மாற்றுத் திறனாளி பெண் பிரித்திக்கு துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது அளிக்கப்பட்டது.19 வயதுக்கு உட்பட்ட தமிழக மட்டைப் பந்து அணியின் தலைவியாகவும், தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிக்கான மாநில அணியை 17-ஆம் வயதில் தலைமையேற்றும் வெற்றி பெற்றுள்ளார் பிரித்தி. அவருக்கு ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு உடல் உறுப்புகள் முற்றிலும் செயலிழந்த நிலையில் சக்கர நாற்காலியைச் சார்ந்தே அவரது வாழ்க்கை அமைந்தது. ஆனாலும், சோர்வடையாமல் உற்சாகத்தோடு செயல்பட்டு விபத்துகளில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக அறக்கட்டளையைத் தொடங்கிச் செயல்படுத்தி வருகிறார்.
  • இவர் மாற்றுத்திறனாளிகளுக்காக “சோல்ப்ரீ” (“Soul Free”) என்ற அமைப்பை நடத்திவருகிறார்.
ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் விருது
  • கல்வி, அறிவியல், மருத்துவம் போன்ற துறைகளில் சாதனை படைப்போருக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் விருது அளிக்கப்படுகிறது. இந்த விருது இந்த ஆண்டு சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜனுக்கு வழங்கப்பட்டது.
  • இவர் தேசிய அளவில் புகழ்பெற்ற உயர்கல்வி வல்லுநர், பன்னாட்டு அளவில் பாராட்டுப் பெற்ற ஆராய்ச்சியாளர். இதுவரை 345 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், 20 நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவருடைய 8 கண்டுபிடிப்புகளுக்காக காப்புரிமை பெற்றுள்ளார். மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் வைரோஹெப் என்ற மருந்தை இந்திய மருத்துவத் தாவரத்தில் இருந்து கண்டுபிடித்து அதற்கான காப்புரிமையும் பெற்றுள்ளார். இந்தச் சாதனைகளுக்காக ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழக இணை வேந்தர் (ஆராய்ச்சி), டாக்டர் எஸ்.பி.தியாகராஜனுக்கு அப்துல் கலாம் விருது அளிக்கப்பட்டது.
நல் ஆளுமை விருதுகள்
  • தமிழக அரசுத் துறைகளில் சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தியதற்கு நல் ஆளுமை விருதுகள் அளிக்கப்படுகின்றன. காவல் வீட்டுவசதி வாரியம், வேளாண்மைத் துறை இயக்குநரகம், வணிகவரிகள் துறை ஆகியவற்றுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.
  • தமிழகத்தில் கல்லீரல் சிகிச்சைப் பிரிவை அமைத்த சென்னை மருத்துவக் கல்லூரியின் கல்லீரலியல் துறைத் தலைவர் கே.நாராயணசாமி, மரங்களை வளர்க்கும் போது அதன் வேர்களுக்கே நேரடியாக தண்ணீரைச் செலுத்தும் வகையிலான புதிய நடைமுறையைக் கண்டுபிடித்ததற்காக வருவாய் நிர்வாக ஆணையாளர் கொ.சத்யகோபால் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் பழனிச்சாமி அளித்தார்.
  • 9 ஆயிரம் பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சையும், 310 பேருக்கு விழிவெண்படல மாற்று சிகிச்சையும் ('கார்னியல் டிரான்ஸ்பிளான்டேஷன்') செய்து மாற்றுத் திறனாளிகள் நலனுக்காகப் பணியாற்றி வரும் காஞ்சிபுரம் கண் அறுவை சிகிச்சை மருத்துவர் வீ.ம. சங்கரனுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கான விருது அளிக்கப்பட்டது. இவர் கண் வங்கிகள் மூலம் மாநிலத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு 3300 கண்களை சேகரித்து சேவை புரிந்துள்ளார்
  • சிறந்த சமூகப் பணியாளர் விருது மதுரை க்யூர் அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மைய நிறுவனர் வெ.பெ.இளையபாரி, சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது மெடிந்தியா அறக்கட்டளை ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது.
  • மாற்றுத் திறனாளிகளுக்கு மிக அதிகளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனமாக திருச்சி ஆர்பிட் நிறுவனமும், சிறப்பாகச் செயல்படும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்கான விருது, சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்கும் அளிக்கப்பட்டன. இந்த விருதுகள் தலா 10 கிராம் பதக்கமும், சான்றிதழும் அடங்கியது.
மகளிர் நலன்
  • பெண்கள் நலனில் சிறந்து விளங்கி தொண்டாற்றும் நிறுவனமாக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிவாசிகள் நலச் சங்கமும், சமூகப் பணியாளருக்கான விருது கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதனுக்கும் அளிக்கப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகள்
  • சிறந்த மாநகராட்சி : திருநெல்வேலி மாநகராட்சி .
  • சிறந்த நகராட்சி: சத்தியமங்கலம் நகராட்சி (முதல் பரிசு), பூந்தமல்லி நகராட்சி (இரண்டாம் பரிசு) திருமங்கலம் நகராட்சி (மூன்றாம் பரிசு).
மாநில இளைஞர் விருதுகள்
  • ''நோ ஃபுட் வேஸ்ட்'' என்ற லாப நோக்கமில்லாத அமைப்பையும், எதுதர்மா என்ற இணைய வழி உதவித் தொகைத் திட்டத்தையும் செயல்படுத்தி வரும் கோவை மாவட்டம் ஆ.கோ.பத்மநாபன், பெண்களை ஆபத்தான பட்டாசுத் தொழிலில் இருந்து மீட்டு தொழில்முனைவோராக மாற்றி வரும் விருதுநகர் மாவட்டம் கோ.உமையலிங்கம், சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்பு, தூய்மைப் பணிகள் போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வரும் திருநெல்வேலி மாவட்டம் உ.ஸ்ரீபதி தங்கம் ஆகியோருக்கு இளைஞர் விருதுகள் அளிக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்