தமிழ்நாடு அரசின் 10 புதிய சட்டங்கள் மீதான அறிவிக்கை
April 15 , 2025 6 days 76 0
தமிழக அரசானது வரலாற்றில் மிகவும் முதல் முறையாக, ஆளுநரிடமிருந்து அல்லது குடியரசுத் தலைவரிடமிருந்து ஒப்புதல் எதுவும் பெறாமல் 10 சட்டங்களை அறிவித்து உள்ளது.
இந்த நடவடிக்கையானது இந்தியச் சட்டமியற்றலின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பால் செயலாக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதியன்று, தமிழ்நாடு அரசு ஆனது மாநில அரசிதழில் 10 சட்டங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்தச் சட்டங்கள் முன்னர் மாநிலச் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்த நிலையில், ஒரு சிறப்பு அமர்வில் மீண்டும் அந்தச் சட்டங்கள் மீண்டும் ஏற்றுக் கொள்ளப் பட்டு பின்னர் அவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப் பட்டது.
பெரும்பாலான இந்தச் சட்டங்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களின் நியமனங்கள், ஆளுநர் மற்றும் வேந்தரிடம் உள்ள அதிகாரங்களைப் பறித்து, அதற்குப் பதிலாக தற்போது அரசாங்கத்திடம் வழங்கும் விதிமுறைகளைக் கொண்டுள்ளன.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆனது நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படாதவற்றை நீதித் துறை மறு ஆய்வின் கீழ் கொண்டு வந்துள்ளது என்பதோடு மேலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒப்புதலை வழங்கும் விதியையும் அறிமுகப் படுத்தியுள்ளது.
தற்போது, இந்தத் தீர்ப்பு இந்தியா முழுவதற்கும் பொருந்தும்.
எதிர்காலத்தில் உருவாக்கப்பட உள்ள மசோதாக்கள் குறித்து ஆளுநர்கள் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை காலக்கெடுவை நிர்ணயித்து உள்ளதால், அனைத்து மாநிலங்களின் ஆளுநர்களும் அதற்கு இணங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டிப்பாக, அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த ஒரு பெரும் பிரச்சினையானது ஐந்து பேர் கொண்ட அமர்வினால் முடிவு செய்யப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு பரிந்துரைப்பதால், இரண்டு பேர் கொண்ட அமர்வானது ஓர் அரசியலமைப்புச் சட்டப் பிரச்சினையை முடிவு செய்திருக்க முடியுமா என்பதும் இனி விவாதத்திற்குரியதாக அமையும்.