தமிழ்நாடு மாநில ஆளுநர் 5 உறுப்பினர்கள் கொண்ட தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியான P. தேவதாஸை நியமித்துள்ளார்.
தமிழ்நாடு லோக் ஆயுக்தாவானது ஒரு தலைவர், இரண்டு நீதித் துறை சார் உறுப்பினர்கள், இரண்டு நீதித் துறை சாராத உறுப்பினர்கள் உள்ளிட்ட 5 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும்.
இந்த ஊழல் எதிர்ப்பு அமைப்பின் நீதித் துறைசார் உறுப்பினர்களாக முன்னாள் மாவட்ட நீதிபதிகளான கே. ஜெயபாலன் மற்றும் R. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் நீதித்துறை சாராத உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான எம். ராஜாராம் மற்றும் மூத்த வழக்குரைஞரான K. ஆறுமுகம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அவர்கள் பதவியேற்ற நாளிலிருந்து ஐந்து வருடங்கள் வரையோ அல்லது 70 வயதை அடையும் வரையோ இவற்றில் எது முன்னர் வருகிறதோ அது வரை அப்பதவியில் இருப்பார்கள்.
பொதுப் பணியாளர்களுக்கு எதிரான புகார்களைப் பதிவாளரிடமோ அல்லது அதற்குரிய அதிகாரியிடமோ நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும். முகவரி இல்லாமல் பெறப்படும் புகார்கள் இக்குழுவினால் பரிசீலிக்கப்பட மாட்டாது.