தமிழ்நாட்டின் முதல் அரசு பயிற்சி பெற்ற பிராமணரல்லாத அர்ச்சகர்
August 6 , 2018 2304 days 3139 0
தமிழ்நாட்டில் முதல் முறையாக, மதுரையில் உள்ள கோவில் ஒன்று அனைத்து சாதித் தடைகளையும் தகர்த்து, பிராணமல்லாதவரை அர்ச்சகராக நியமித்துள்ளது.
1970ம் ஆண்டில் கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் ஒரு ஆணையை பிறப்பித்தார்.
ஆனால் இந்த ஆணை உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது.
மீண்டும் 2006ம் ஆண்டில், கருணாநிதி மீண்டும் ஒரு ஆணையை பிறப்பித்தார். இம்முறை 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அந்த ஆணையை உறுதி செய்தது.
2006ம் ஆண்டு உத்தரவை தொடர்ந்து, எஸ்சி/எஸ்டி சமூகத்தைச் சார்ந்த 24 நபர்கள் உள்பட 206 ஆண் நபர்கள் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில் பயிற்சி பெற்று இளநிலை அர்ச்சகர் சான்றிதழை பெற்றனர்.
இவ்வருடம் மார்ச் முதல் தேதி, பயிற்சி பெற்ற 206 நபர்களில் ஒருவரான T.மாரிச்சாமி என்பவர் மதுரை தல்லாகுளம் ஐய்யப்பன் கோவிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்.
பாரம்பரியமான அர்ச்சகர்களின் பரம்பரை வழியை சாராமல், முறையாக அர்ச்சகராக பயிற்சி பெற்று பிறகு கோவில்களில் பூஜை செய்பவராக நியமிக்கப்படும் முதல் நபர் இவராவார்.
இந்நியமனம் தனிக் கோவில்களின் ஆகம சாத்திர விதிகளுக்கு உட்பட்டு (பிரார்த்தனை, கோவில் கட்டிடம் மற்றும் சடங்குகள்) செய்யப்பட்டது.
2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம், 2006ம் ஆண்டு வெளியிட்ட உத்தரவை தடை செய்ய மறுத்து விட்ட அதே சமயம், அர்ச்சகர்கள் நியமனம் சம்பந்தப்பட்ட கோவில்களில் செய்யப்படும் வழிபாட்டிற்கு தொடர்புடைய ஆகம விதிகளுக்கு உட்பட்டு அமைய வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பே 2017ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கேரள அரசு தலித் வகுப்பைச் சேர்ந்த ஒருவரை அர்ச்சகராக நியமிக்க வழிவகை செய்தது.