இது இந்தியத் தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையத்தினால் வெளியிடப்பட்டது.
இந்த வரைபடப் பதிவிற்கானப் பகுப்பாய்விற்கு 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் பயன்படுத்தப் பட்டுள்ளதால், மாநிலத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை 7,21,47,030 எனக் கணக்கில் கொள்ளப் பட்டுள்ளது.
மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 96.20% பேர் தமிழ் மொழியையும்; 8.05% பேர் தெலுங்கு மொழியையும்; 2.59% பேர் கன்னட மொழியையும்; மற்றும் 1.40% பேர் மலையாள மொழியையும் அவர்களின் தாய் மொழியாகவோ அல்லது அவர்களின் முதல் அல்லது இரண்டாவது துணை மொழியாகவோ கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 18.49% பேர் ஆங்கிலம் மொழி பேசக் கூடியவர்கள் ஆவர்.
இந்த மாநிலத்தில் உள்ள ஒட்டு மொத்த மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பின்வரும் ஐந்து முக்கிய மொழிகள் வகைப்படுத்தப் பட்டுள்ளன - அவை தமிழ் (6,37,53,997), தெலுங்கு (42,34,302), கன்னடம் (12,86,175), உருது (12,64,537) ), மலையாளம் (7,26,096).
இது தவிர, பிற மொழிகளைப் பேசுபவர்கள் 8,81,923 பேர் ஆவர்.
இம்மாநிலத்தில் 24 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் மூன்று மொழிகளைப் பேசக் கூடியவர்களாக உள்ளனர்.
மும்மொழி பேசுபவர்களைத் தவிர்த்து, இந்த மாநிலத்தில் 1.79 கோடிக்கும் அதிகமான மக்கள் இரு மொழிகளைப் பேசக்கூடியவர்களாக உள்ளனர்.
17 திராவிட மொழிகளில், 14 திராவிட மொழிகளைப் பேசுபவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர் என்ற அதே சமயத்தில் ஜடாபு, கோலாமி மற்றும் கோயா ஆகிய மொழிகள் தமிழகத்தில் பேசப் படவில்லை.
முக்கியமாக தென்னிந்தியாவில் 60 மில்லியன் மக்களும், உலகளவில் 68 மில்லியன் மக்களும் தமிழ் மொழி பேசுபவர்களாக உள்ளனர்.
1991 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்ட, இந்தியாவின் முதலாவது மொழி சார் வரைபடமானது 2004 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.