தலைமறைவான பொருளாதார குற்றவாளிகள் அவசரச் சட்டம் 2018
May 1 , 2018 2401 days 926 0
வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய வழிவகுக்கும் 2018-ஆம் ஆண்டின் தப்பியோடிய தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் அவசரச் சட்டத்தின் (Fugitive Economic Offenders Ordinance 2018) பிரகடனத்திற்கான முன்மொழிவிற்கு மத்திய கேபினேட் அனுமதி வழங்கியுள்ளது.
இத்தகு பொருளாதார குற்றவாளிகள் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act - PMLA) கீழ் விசாரணை செய்யப்படுவர்.
கடன் பெற்று மோசடி செய்து வெளிநாட்டிற்கு தப்பியோடியவர்களின் சொத்துகளை அவர்களுடைய குற்றத்திற்கான தண்டனை வழங்காமலேயே (without conviction) பறிமுதல் செய்யவும் அத்தகு சொத்துகளை விற்பதன் மூலம் கடன் கொடுத்தவர்களுக்கு திரும்ப கடன் தொகையை செலுத்துவதற்கும் இந்த அவசரச் சட்டம் வழி வகுக்கின்றது.
இந்த அவசரச் சட்டத்தின்படி, 2002 ஆம் ஆண்டின் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்ட இயக்குநர் அல்லது துணை இயக்குநர் வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத நபரை / தப்பித்து ஒடியவரை தலைமறைவான பொருளாதார குற்றவாளியாக (fugitive economic offender) அறிவிக்க பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.
இந்த சிறப்பு நீதிமன்றத்தின் ஆணைகளுக்கு எதிரான மேல்முறையீட்டை உயர் நீதிமன்றத்தில் மேற்கொள்ளலாம்.