சர்வதேச நீதிமன்றத்தின் [International Court of Justice-ICJ] நீதிபதி பணியிடங்களுக்கான தேர்தலில் இந்தியா சார்பில் போட்டியிட்ட தல்வீர் பண்டாரி மீண்டும் இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் ICJ-ன் மொத்தமுள்ள 15 நீதிபதிகளில் சுழற்சி முறையில் 5 நீதிபதி பணிஇடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் கடைசி மற்றும் 5-வது இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச நீதிமன்ற சட்டத்திட்டப்படி, ஐ.நா. பொது சபையிலும் (UNGA-United Nations General Assembly), பாதுகாப்பு கவுன்சிலிலும் [United Nations Security Council – UNSC] அறுதிப் பெரும்பான்மை (Absolute Majority) வாக்குகள் பெறுபவர்களே நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
அதாவது பொது அவையில் 97 வாக்குகள் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் 8 வாக்குகளும் பெற வேண்டும்.
இதற்கான தேர்தல் நியூயார்க்கில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தின் பொது அவையிலும், பாதுகாப்பு கவுன்சிலிலும் ஒரே நேரத்தில், தனித்தனியாக நடைபெற்றது.
அவ்வாறு நடைபெற்ற வாக்கெடுப்பில், ஐ.நா. பொது அவையில் 193 உறுப்பினர்களின் வாக்குகளில் தல்வீர் பண்டாரி 183 வாக்குகள் பெற்று பெரும்பான்மை பெற்றார். ஆனால் பாதுகாப்பு கவுன்சிலில் பண்டாரியின் பெரும் போட்டியாளராக திகழ்ந்த கிறிஸ்டோபர் கிரீன்உட் மொத்தமுள்ள 15 வாக்குகளில் 9 வாக்குகள் பெற்று பெரும்பான்மயை வென்றார்.
இந்நிலையில், இங்கிலாந்து தனது வேட்பாளரான கிறிஸ்டோபர் கிரீன்வுட்டை போட்டியிலிருந்து விலக்கியதை தொடர்ந்து பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதன்மூலம் இரண்டாவது முறையாக பண்டாரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் கடந்த 71 ஆண்டுகால வரலாற்றில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் கூட சர்வதேச நீதிமன்றத்தில் இடம் பெறாமல் இருப்பது இதுவே முதல்முறையாகும்..
9 ஆண்டுகள் பதவிக்காலம் உடைய இப்பதவியில் பண்டாரி 2027 வரை பதவி வகிப்பார்.
தல்வீர் பண்டாரி 2014-ல் பத்ம பூஷன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நீதிமன்றம் - ICJ
ICJ ஆனது ஐ.நா. வின் முதன்மை நீதி வழங்கும் அமைப்பாகும்.
இதன் தலைமையகம் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் அமைந்துள்ளது.
இந்த நீதிமன்றமானது உறுப்பு நாடுகளினால் தாக்கல் செய்யப்பெறும் சட்ட விவகாரங்கள் சார்ந்த வழக்குகளைத் தீர்க்கும். மேலும் ஐநா பொதுஅவை மற்றும் முறையாக அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அமைப்புகள், நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்படும் சட்ட விளக்கம் சார்ந்த கேள்விகளுக்கு ஆலோசனை கருத்துகளை வழங்கும்.
இதில் மொத்தம் 15 நீதிபதிகள் 9 ஆண்டுகாலமுடைய பதவிக்காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
நிரந்தர நடுவர் நீதிமன்றத்தில் [PCA – Permanent Court of Arbitration] உள்ள நாடுகளின் குழுக்களால் போட்டியிடப் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வேட்பாளர்களை ஐ.நா. பொதுஅவை மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தேர்ந்தெடுக்கும்.
நீதிமன்றத்தின் தொடர்ந்த செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, 15 நீதிபதிகளில் 5 நீதிபதிகள் 3 ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஒரே நாட்டைச் சேர்ந்த இரு நீதிபதிகள் இம்மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படமாட்டார்கள்.
P5 எனப்படும் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர ஐந்து உறுப்பு நாடுகளான பிரான்ஸ், இரஷ்யா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் எப்போதும் ஒரு உறுப்பினரைக் கொண்டிருக்கும்.
ஆனால் இதற்கு மாற்றாக சீனா எந்த ஒரு வேட்பாளரையும் முன்னிறுத்தாத காரணத்தால் 1967 முதல் 1985 வரை எந்த ஒரு சீன நீதிபதியையும் இம்மன்றத்தில் இடம்பெறவில்லை.
வழக்கு விசாரணைகளில் நீதிபதிகள் கூட்டு தீர்ப்பையோ அல்லது அவர்களுடைய தனிப்பட்ட கருத்தையோ வழங்கலாம்.
வழக்கின் தீர்ப்பு மீதான முடிவுகளும், ஆலோசனை கருத்துகளும் பெரும்பான்மை அடிப்படையிலேயே எடுக்கப்படும். பெரும்பான்மை கிடைக்காமல் சமவாக்கு நிலை ஏற்பட்டால் மன்ற தலைவரின் முடிவு இறுதி தீர்ப்பாக அமையும்