இந்தியாவில் அனைத்து முக்கிய துறைமுகங்களிலும் தளவாட தரவு வங்கி (The Logistics Data Bank) சேவை அமைக்கப்பட உள்ளது. தகவல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நாட்டிலுள்ள தளவாடங்கள் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்திய துறைமுக கூட்டமைப்பு (Indian Ports Association - IPA) கப்பல் வழி போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்ற துறைமுகங்களை மேற்பார்வையிடும் ஒரு அமைப்பாகும். தற்சமயம் இச்சேவையானது மேற்கில் உள்ள தளவாடங்களின் வழித்தடங்களுக்கு மட்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தளவாட தரவு வங்கி திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு கொள்கலனிலும் ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) பட்டை ஒட்டப்பட்டு அவை ரேடியோ அதிர்வெண் அடையாள பட்டை கண்காணிப்பாளர்களால் கண்காணிக்கப்படுகிறது. இது இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பொருட்களின் போக்குவரத்து நிலையை கண்காணிக்கப் பயன்படுகிறது.
தளவாட தரவு வங்கி திட்டமானது ஜூலை 2016ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது இந்திய அரசின் வெளிநாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கவும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், எளிதில் தொழில் நடைபெறுவதை உறுதி செய்யவும் துவங்கப்பட்டது.
கொள்கலன்கள் செல்லும் நேரத்தை குறைக்கவும் பரிவர்த்தனை செலவுகளை குறைக்கவும் இத்திட்டம் பெரும் உதவியாக இருக்குமென கருதப்படுகிறது.
ஜப்பானில் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான NEC Corporation மற்றும் டெல்லி மும்பை இன்டஸ்டிரியல் காரிடர் டிரஸ்ட் (DMIC) ஆகியவை இணைந்து ஒரு சிறப்பு நோக்கு வாகனத்தை டெல்லி மும்பை இன்டஸ்டிரியல் காரிடர் டெவலப்மண்ட் கார்ப்பரேசன் லாஜிஸ்டிக் டேட்டா சர்வீஸ் லிமிடெட் (Delhi Mumbai Industrial Corridor Development Corporation Logistics Data Services Ltd. - DLDSL) என்ற பெயரில் உருவாக்கியுள்ளனர்.
இந்த திட்டம் உள்நாட்டு கொள்கலன் கிடங்கு மற்றும் கொள்கலன் சரக்கு நிலையங்களின் ஒட்டு மொத்த இயக்கத்தை இரயில் அல்லது சாலைப் போக்குவரத்து மூலம் உள்ளடக்குகிறது.