மாசெசூட்ஸ் தொழிற்நுட்ப கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மின்மினிப் பூச்சிகளின் ஒளிர்வுக்குப் பயன்படும் ஒளிரும் வேதியியல் (Luminescent Chemical) பொருட்களை தாவரங்களில் செலுத்தி அதன் மூலம் தாவரங்களின் இலைகளை பிரகாசமாக ஒளிரச் செய்வது சாத்தியமே என நிருபித்துள்ளனர்.
ஒளிரும் தாவரங்களை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் மின்மினிப் பூச்சிகளின் ஒளிர்வுக்கு பயன்படும் “லூசிபெரேஸ்“(Luciferase) எனும் நொதியை தாவரங்களில் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த “லூசிபெரரேஸ்“ நொதியானது லூசிபெரின் (Luciferin) எனும் மூலக்கூறின் மேல் செயல்படுவதே இத்தகு ஒளிர்வின் வெளிப்பாட்டிற்கு காரணமாகும். இத்தகு நிலையில் துணை நொதி A ஆனது (Co enthyme A) ஒளிர்வு செயல்பாட்டின் முழு நிலைகளிலும் உதவும்.
இது லூசிபெரேஸ் நொதியின் செயல்பாட்டிற்கு தடையாக உள்ள அனைத்தையும் நீக்கும்.
இந்த மூன்று ஒளிர்வுக்கு பயன்படும் கூறுகளும் வெவ்வேறு அளவுடைய சிறிய சிலிக்கா நானோ பொருட்களில் அடக்கப்படும். பின் இவை தாவரங்களின் வெவ்வேறு பகுதியில் செலுத்தப்படுவதால் இம்மூன்று ஒளிர்வு கூறுகளும் தாவர இலைகளை அடையும்.
இவை தாவரங்களில் உட்செலுத்தப்படும் அல்லது தாவரங்கள் சில மணிநேரம் இவற்றில் மூழ்கி வைக்கப்படும். இதன் மூலம் தாவரங்கள் ஒளிர்வு தன்மை பெறும்.
இத்தொழிற்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் தாவரங்கள் குறை-ஒளிர்அடர்வு உடைய உள்ளரங்க (indoor) தாவரங்களாகவும், சுய ஆற்றலுடைய தெரு விளக்குகளுக்கு பதிலாக ஒளி தரும் மரங்களாகவும் பயன்படுத்தப்படும்.