திவால் சட்டத்தில் (IBC – Insolvency and Bankruptcy Code) சில திருத்தங்களை கொண்டு வருவதற்காக அரசியலமைப்புச் சட்டம் விதி 123-ன் கீழ் அவசர சட்டத்தை இயற்றிட வேண்டி மத்திய அமைச்சரவை அளித்த முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த அவசர சட்டத்தின் மூலம் திவால் சட்டத்தின் பிரிவுகள் 2,5, 25, 30, 35 மற்றும் 240 களில் திருத்தம் மேற்கொள்ளப்படும். மேலும் புதிதாக 29A மற்றும் 235A எனும் இரு பிரிவுகள் சேர்க்கப்படும்.
டிசம்பரில் கூட்டப்பட உள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த அவசர சட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
புதிதாக இணைக்கப்பட உள்ள பிரிவு 29-Aன் படி இச்சட்டத்தின் கீழ் வேண்டுமென்றே கடனை திரும்பி செலுத்தாதவர்கள் (Wilful Defaulters) மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வருடம் வாராக்கடன்களை வைத்திருப்பவர் போன்றோர் திவால் தீர்மான செயல்முறையின் சொத்துகளுடைய ஏலத்தில் பங்கெடுப்பதை தடை செய்கிறது.
இந்த சட்டமானது பெருநிறுவனங்கள் விவகார துறை அமைச்சகத்தால் (Corporate Affairs Ministry) அமல்படுத்தப்படுகின்றது.
பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சகமானது திவால் சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளை அடையாளம் கண்டு அவற்றை சரி செய்ய தேவையான வழிகளை பரிந்துரைக்க 14 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அமைத்துள்ளது.
திவால் சட்டமானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைமுறைக்கு வந்தது. இது சந்தைசார்ந்த, குறிப்பிட்ட காலத்திற்குள்ளான திவால் தீர்மான செயல்முறை மூலம் வங்கிகளின் கடனை வசூலிக்க வழிவகை செய்கின்றது.
திவால் சட்ட குழுவின் தலைவரான பெருநிறுவன விவகாரத்துறை செயலர் இன்ஜேதி சீனிவாஸ், இந்த சட்டத்தின் அமலாக்கத்திற்கு முக்கிய பங்கு வகிப்பார்.