சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மேம்படுத்தும் பதிப்பிலான (Beta version) “திவ்யாங் சாரதி” எனும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகிடத்தக்க மற்றும் எளிதில் தகவல்களை பெறக்கூடிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
மாற்றுத் திறனாளிகள் சார்ந்த திட்டங்கள், ஊக்கத்தொகை, நிறுவன ஆதரவுகள், வேலைவாய்ப்புகள் மற்றும் பிற முக்கியத் தகவல்களை மாற்றுத்திறனாளிகளுக்கு அளித்து அவர்களை மேம்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
இந்தச் செயலி "சுகம்யா பாரத் அபியான்" எனும் அணுகிடத்தக்க இந்தியா எனும் பிரச்சாரத்தின் (Accessible India Campaign) தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து தேவையான தகவல்களும் அணுகிடத்தக்க வகையில் கட்டாயம் இருக்க வேண்டுமென கூறும் மாற்றுத்திறனாளிக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் கூறுகளோடும் (Rights of person with disability Act -2016), உலகளாவிய அணுகலுக்கான ஐ.நாவின் ஊனமுற்றோர் உரிமைகள் சாசனத்தின் கொள்கைகளோடும் (United nation Convention on Right of Persons with disability) இந்தச் செயலி இணக்கமுடையது.
குரல் பதிவை உரைப் பதிப்பாக (Audio note to text), மாற்றும் மென்பொருள் உள்ளடக்கமும், பயன்பாட்டளர்களின் தேவைக்கேற்ப எழுத்துரு அளவை மாற்றியமைக்கும் வசதிகளும் இருப்பது இச்செயலியில் உள்ள முக்கிய சிறப்பம்சங்களாகும்.