ஐக்கிய அரபு அமீரகத்தில் 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக மழை பெய்து உள்ளது.
சில பகுதிகளில் 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 250 மிமீ (சுமார் 10 அங்குலம்) மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
1949 ஆம் ஆண்டில் பதிவுகள் மேற்கொள்ளப்பட தொடங்கியதில் இருந்து 24 மணி நேரத்தில் பெய்த மிகப்பெரிய அளவிலான மழைப்பொழிவு இதுவாகும்.
மேக விதைப்பு ஆனது இந்த மழைக்குக் காரணமாக இருக்கலாம் என்ற ஊகங்களை நிபுணர்களும் அதிகாரிகளும் மறுக்கின்றனர்.
மேக விதைப்பு என்பது மழை அல்லது பனியை அதிகரிக்கச் செய்யும் ஒரு வகை வானிலை மாற்றச் செயலாகும்.
மேக விதைப்பு என்பது வானத்தில் விமானங்கள் மற்றும் நிலத்தில் சில பீரங்கிகளைப் பயன்படுத்தித் துகள்களை மேகங்களில் நுழைத்து அதிக நீர் ஈர்ப்பு கருக்களை உருவாக்கி ஈரப்பதத்தை ஈர்க்கின்ற செயல்முறையாகும்.
போதுமான நீர்த்துளிகள் ஒன்றிணைந்தவுடன், அவை கனமாகி, மழை அல்லது பனியாக பூமியில் விழுகின்றன.
சில்வர் அயோடைடு இந்தச் செயல்பாட்டினைத் தூண்டக்கூடிய திறன் கொண்டது.
உலர் பனி போன்ற பிற பொருட்களும் இவற்றிற்காகப் பயன்படுத்தப்படலாம்.
இந்த செயல்முறையில் தெளிவான வானத்திலிருந்து தண்ணீரை உருவாக்க முடியாது, மாறாக மழையாக பொழியச் செய்வதற்கு அல்லது இயற்கையாக பெய்யும் அளவை விட அதிகமாக பொழியச் செய்வதற்குத் துகள்கள் ஏற்கனவே ஈரப்பதத்தை கொண்டு இருக்கும் மேகத்திற்குள் செலுத்தப்பட வேண்டும்.
அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, இந்தியா, மலேசியா, ரஷ்யா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட சுமார் 50 நாடுகள் மேக விதைப்பு முறையைப் பயன்படுத்துகின்றன.