துருப்பிடிக்காத இரும்பு இறக்குமதியின் மீது எதிர்குவிப்பு தடுப்பு வரி
October 27 , 2017 2727 days 1353 0
துருப்பிடிக்கா சில குளிர் உருளை எஃகு தயாரிப்புகள் மீது சீனா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்வதை தடுக்கும் பொருட்டு எதிர் குவிப்பு தடுப்பு வரியினை (Anti-Dumping Duties), உள்ளூர் தயாரிப்பாளர்களை கருத்தில் கொண்டு, இந்தியா சுமத்தியுள்ளது.
இந்த புதிய வரி விதிப்பு, 10-டிசம்பர்-2020 வரை நடைமுறையில் இருக்கும். சில ரக துருப்பிடிக்காத இரும்பிற்கு வரிவிலக்கு உண்டு.
வெப்ப உருளை மற்றும் குளிர் உருளை துருப்பிடிக்காத எஃகு தயாரிப்புகளின் மீது கடந்த மாதம் அரசு கூடுதலாக95% ஈடுசெய் வரியினை விதித்துள்ளது. இதுவே இரும்புத் தயாரிப்புகளின் மீதான முதலாவது வரிவிதிப்பாகும்.
ஈடுசெய்வரி (Countervailing Duty)
இது ஓர் கூடுதல் இறக்குமதி வரிவிதிப்பாகும். இது ஏற்றுமதி செய்யும் நாட்டில் அப்பொருள்கள் ஏற்றுமதி மானியங்கள் மற்றும் வரிவிலக்குகள் பெற்றிருப்பின், அதன் மீது இறக்குமதி செய்யப்படும் நாட்டினால் வரி விதிக்கப்படுகிறது.
எதிர்குவிப்பு தடுப்புவரி (Anti-Dumping Duty)
எதிர் குவிப்பு தடுப்பு வரி என்பது, உள்நாட்டு அரசினால் விதிக்கப்படும் ஓர் பாதுகாப்பு வரியாகும். இதன் மூலம் நியாயமான சந்தைவிலை நிர்ணயிக்கப்படும் என நம்பப்படுகிறது.
குவித்தல் என்பது பொதுவாக ஏற்றுமதி செய்யும் நாடு, சரக்குகளை இறக்குமதி செய்யும் நாட்டின் சந்தை விலையைவிட மிகக் குறைந்த விலைக்கு சரக்குகளை தருவதாகும்.
உள்ளூர் சந்தைகளை பாதுகாக்க, பல்வேறு நாடுகள் எதிர் குவிப்புத் தடுப்பு வரியினை விதித்துள்ளன. அவற்றின் மூலம் சொந்த நாடுகளின் தேசியச் சந்தைகள் காக்கப்படும் என நம்பப்படுகிறது.