மத்திய அரசின் நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்படும் தேசிய ஆயுஷ் மருத்துவ திட்டத்தினை (NAM) ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2020 வரை மூன்று ஆண்டு காலத்துக்கு தொடர்ந்து செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தேசிய ஆயுஷ் மருத்துவ திட்டம் (NAM) மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. அனைவருக்கும் மலிவான விலையில் ஆயுஷ் மருத்துவ சேவைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட இத்திட்டத்தை, மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ள மத்திய அரசு இதற்காக 2400 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
மருத்துவம் மற்றும் சுகாதார சேவைகள் கிடைப்பதில் மக்களுக்கு இருக்கும் இடைவெளிகளை குறைப்பதற்காக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து ஆயுஷ் மருத்துவ திட்டம் தீர்வுகளைக் கண்டு வருகிறது. பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகள் மற்றும் தொலை தூரத்தில் இருக்கும் மக்களிடம் ஆயுஷ் மருத்துவ சேவைகளைக் கொண்டு சேர்ப்பதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
தேசிய ஆயுஷ் மருத்துவ திட்டமானது இந்தியாவின் பழம்பெரும் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளை பற்றிய அறிவினை நோய் தடுப்புக்கு பயன்படுத்தவும், ஊக்குவிக்கவும் முற்படுகிறது.