பெரும் சமூக சீர்திருத்தவாதியும், தத்துவவாதியும், சிந்தனையாளரும், மற்றும் இந்திய இளைஞர்களுக்கான துடிப்புச் சின்னமாகவும் விளங்கும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ஆம் தேதி ஆண்டுதோறும் நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
சுவாமி விவேகானந்தரின் 155-வது பிறந்த நாள் நினைவு ஆண்டு இவ்வருடம் கொண்டாடப்படுகின்றது.
போதிப்பதையே தம் வாழ்வாகவும், அவற்றையே தம் பணியாகவும், கொண்டு செயல்பட்ட விவேகானந்தரின் தத்துவங்களையும் கொள்கைகளையும், போதனைகளையும் உலகம் முழுவதும் பரப்புவதற்காக தேசிய இளையோர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது.
1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி நரேந்திரநாத் தத்தா எனும் இயற்பெயருடன் பிறந்த சுவாமி விவேகானந்தர் 19ஆம் நூற்றாண்டின் முக்கியத் துறவியான ராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைமைச் சீடராவார். இவர் 1902 ஆண்டு ஜீலை 4 அன்று மண்ணுலகை விட்டுப் பிரிந்தார்.
தன்னுடைய சிகாகோ மாநாட்டின் பேச்சால் புகழ்பெற்ற விவேகானந்தர், வேதாந்தம் மற்றும் யோகா போன்றவற்றிலுள்ள இந்தியத் தத்துவங்களை மேற்கத்திய உலகில் அறிமுகப்படுத்திய இந்திய வாழ்வியல் ஆளுமைகளில் முக்கிய நபருமாவார்.