இந்தியாவின் புகழ்பெற்ற சுயகற்றுணர்வி (Autodidact) மற்றும் பெரும் கணிதவியலாளருமான (Mathematician) சீனிவாச ராமானுஜன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் 22 ஆம் தேதி தேசிய கணித தினம் கொண்டாடப்படுகின்றது.
சீனிவாச இராமானுஜனின் 130 வது பிறந்த ஆண்டை காணும் இவ்வாண்டில் இராமானுஜரின் பிறந்த நாளை “மாநில தகவல் தொழிற்நுட்ப தினமாக“ (State IT Day) தமிழ்நாடு கொண்டாடுகின்றது.
எண்ணியல் கோட்பாடு (Number Theory) கணிதப் பகுப்பாய்வு (Mathematical Analysis), முடிவிலாத் தொடர் வரிசைகள் (Infinite Series), புதிய சூத்திரங்கள் மற்றும் சமன்பாடுகளை வகுத்தல் போன்றவற்றில் அளப்பரிய பெரும் பங்காற்றிய இவர், இராமானுஜ பகா எண்கள் (Ramanujam Prime) மற்றும் இராமானுஜம் தீட்டா (Ramanujam Theta) போன்றவற்றையும் கண்டுபிடித்துள்ளார்.
சாஸ்திரா இராமானுஜம் பரிசானது தமிழகத்தின் சாஸ்திரா பல்கலைக்கழகத்தினால் இராமானுஜத்தினால் ஆட்கொள்ளப்பட்டு கணிதத்தின் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கிய 32 வயதினை மிகாத கணிதவியலாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது.
இராமானுஜத்தின் 125 வது பிறந்த நாள் ஆண்டை கொண்டாடும் விதமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் இராமனுஜரின் பிறந்த நாள் தினமானது தேசிய கணித தினமாக நிறுவப்பட்டது.
மேலும் 2012ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாகவும் அறிவிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் கணிதவியலாளரான காட்பிரே ஹரோல்டு ஹார்டியுடன் இணைந்து 1729ன் இரு கன முப்படி மூலங்களின் கூடுதலின் (Sum of two cubes 1729) சிறிய மதிப்பை கண்டுபிடித்தார். இந்த சிறு மதிப்புடைய எண்ணானது ஹார்டி-இராமானுஜம் எண்1729 (Hardy Ramanujam - Number 1729) என்றழைக்கப்படுகிறது.