கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கான (lactating women) முறையான சுகாதார பராமரிப்பு சிகிச்சை மற்றும் மகப்பேறு வசதிகள் மீது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 11 ஆம் தேதி தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் (National Safe Motherhood Day-NSMD) கொண்டாடப்படுகின்றது.
2018 ஆம் ஆண்டிற்கான தேசிய பாதுகாப்பான தாய்மை தினத்தின் கருத்துரு “மரியாதைக்குரிய மகப்பேறு சிகிச்சை பராமரிப்பு” (Respectful Maternity Care’) ஆகும்.
இந்தியா, தேசிய பாதுகாப்பான தாய்மை தினத்தை கொண்டாடும் உலகின் முதல் நாடாகும்.
பாதுகாப்பான தாய்மைக்கான வெள்ளை ரிப்பன் கூட்டணி இந்தியா (White Ribbon Alliance for Safe Motherhood, India-WRAI) எனும் அமைப்பின் தொடக்கமே தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் ஆகும்.
அனைத்து பெண்களும் தங்கள் மகப்பேறு காலத்தில் மருத்துவ பிரசவ சேவைகள் மற்றும் குழந்தை பிறப்புக்கு பின்னான மருத்துவ சேவைகளை (postnatal services) அணுகுவதை உறுதி செய்வதே இத்தொடக்கத்தின் நோக்கமாகும்.
பாதுகாப்பான தாய்மைக்கான வெள்ளை ரிப்பன் கூட்டணி இந்தியா அமைப்பின் வேண்டுகோளின் படி, மத்திய அரசானது 2003 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பான தாய்மை தினத்தை மகாத்மா காந்தி அவர்களின் துணைவியாரான திருமதி கஸ்தூரிபா காந்தி அம்மையாரின் பிறந்த நாள் தினத்தன்று நிறுவியது.