தேசிய அளவில் எடுக்கப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின்படி 6,049 யானைகளுடன் கர்நாடக மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.
2,700 யானைகளுடன் தமிழகம் 4 - ஆவது இடத்தை பிடித்துள்ளது. தேசிய அளவிலான யானைகள் கணக்கெடுப்பு குறித்த விவரம் 2012 -ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் பின்பு, கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டாலும், யானைகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படாமல் இருந்து வந்தன. தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்கவே யானைகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிடாமல் இருந்து வந்தது.
தற்போது நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களில் உள்ள யானைகளின் எண்ணிக்கை விவரத்தை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2012 -ஆம் ஆண்டு இறுதியாக வெளியிடப்பட்ட கணக்கெடுப்பில், இந்தியாவில் 29, 391 முதல் 30,711 யானைகள் இருப்பதாக தெரிவித்திருந்தது. தற்போது வெளியிடப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியக் காடுகளில் மொத்தம் 27,312 யானைகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, 5 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், நாட்டின் இதர பகுதிகளோடு ஒப்பிடுகையில், தென் இந்தியாவில் அதிக அளவு யானைகள் காணப்படுகின்றன. இங்கு மொத்தம் 11,960 யானைகள் காடுகளில் வசிப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 10,139 யானைகள் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் அதிகபட்சமாக கர்நாடகத்தில் 6,049 யானைகளும், அடுத்ததாக, கேரளத்தில் 3, 054 மற்றும் தமிழகத்தில் 2,761 யானைகளும் உள்ளன. இதில், தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 2012 -ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 3, 500 யானைகள் இருந்தன. தேசிய அளவில் யானைகளின் எண்ணிக்கையில் கர்நாடகத்துக்கு அடுத்து அஸ்ஸாமில் 5,719 யானைகள் உள்ளன.
யானைகளின்எண்ணிக்கைகுறையக்காரணம்
யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமிக்க தொடங்கியதன் காரணமாகவே தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது . எவையெல்லாம் யானைகளின் வழித்தடம் என கண்டறியப்பட்டுள்ளதோ, அவை குறித்த விவரங்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பே அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நகரமயமாக்கலுக்கு பின்னர், காட்டையொட்டி உள்ள பகுதிகள் வருவாய் நிலங்களாகப் பிரிக்கப்பட்டு அவை விற்கப்படுகின்றன. காட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் தனியார் தங்கும் விடுதிகள் அதிகமாகிவிட்டதால், யானைகளின் வழித்தடம் மறைக்கப்படுகிறது. யானைகள் தங்கும் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். காட்டில் அவற்றுக்குத் தேவையான நீர் ஆதாரங்கள், உணவுகள் போன்றவை இல்லாததால், மனிதர்கள் வசிக்கும் இடங்களை நோக்கி அவை நகர்கின்றன.
மேலும், யானைகள் மனிதர்களைத் தாக்குவதற்கு, அவற்றுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல், மனிதர்களின் ஆக்கிரமிப்பு, இடையூறு போன்றவைதான் முக்கியக் காரணங்கள் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.