தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன உறுப்பினர்களுக்கு வீட்டுவசதித் திட்டம்
August 19 , 2017 2687 days 1010 0
நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன உறுப்பினர்களுக்கான வீட்டு வசதித் திட்டத்தை மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தூத்துக்குடியில் தொடங்கி வைத்தார்.
இபிஎப் சந்தாதாரர்கள் அனைவருக்கும் வீட்டு வசதி என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் வீடு இல்லாத இபிஎப் சந்தாதாரர்கள் 10 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக இருந்தால் வருங்கால வைப்பு நிதியில் 90 சதவீதம் மூலமும், வங்கிக் கடன் பெற்றும் வீடு கட்டிக் கொள்ளலாம்.
“2022 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு” எனப் பிரதமர் அறிவித்த திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் இந்தத் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்படும்.
தொழிலாளர் துறையில் சமுதாயப் பாதுகாப்பு, வேலை உறுதி, ஊதிய உறுதி எனப் பெரும் சமூகப் பாதுகாப்புக் காரணிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்சம் ரூ. 12 ஆயிரம் ஊதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்குப் பேறுகால விடுப்பாக 12 வாரங்கள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 26 வாரங்கள் என்றும் அந்த காலகட்டத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.