“ஆரோக்கியமான மாநிலங்கள் முன்னேறும் இந்தியா (Healthy states, progressive India)” என்ற தலைப்பில் இந்தியாவின் சிந்தனைச் சாவடியான நிதி ஆயோக் ஓர் விரிவான ஆரோக்கிய குறியீட்டை வெளியிட்டுள்ளது.
மத்திய ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகத்தின் ஆலோசனையுடன், உலக வங்கியின் தொழிற்நுட்ப உதவியுடன் நிதி ஆயோக்கினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மேம்பாடு ஆகிய களங்களில் தேசத்தினுடைய செயல்பாட்டில் அமைந்துள்ள பல்வகைமை (heterogeneity) மற்றும் சிக்கற்பாடு (complexity) போன்றவற்றை அறிந்து கொள்வதற்கும், அதனை அளவிட ஓர் வருடாந்திர அமைப்பு ரீதியான மதிப்பீட்டு கருவியை (Systematic tool) ஏற்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஓர் முதல் முயற்சியே நிதி ஆயோக்கின் இந்த குறியீடாகும்.
இந்த குறியீட்டின்படி ஆரோக்கியத்திற்கான ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கான வகைப்பிரிவில் (overall performance) பெரிய மாநிலங்களில் கேரளா முதலிடம் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் தமிழகம் உள்ளன.
வருடாந்திர செயல்திறன் அதிகரிப்பை (Annual Incremental Performance) உடைய மாநிலங்களில் ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன.
இதே வகைப்பிரிவில் சிறிய மாநிலங்களுள் மிசோரம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
மேலும் சிறிய மாநிலங்களுள் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கான வகைப்பிரிவில் மணிப்பூர் முதலிடத்தில் உள்ளது.
யூனியன் பிரதேசங்களுள் வருடாந்திர செயல்திறன் அதிகரிப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கிய செயல்பாடு ஆகிய இரண்டிலும் லட்சத்தீவு முதலிடத்தில் உள்ளது.