நுகர்வோர் பாதுகாப்பு மசோதா, 2019 ஆனது நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது 1986 ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மாற்றுகின்றது.
நுகர்வோர் என்பவர் யார்?
நுகர்வோர் என்பவர் தனது தேவைக்காக எந்தவொரு பொருளையும் பெறும் அல்லது ஒரு சேவையைப் பெறும் ஒரு நபர் என்று வரையறுக்கப் படுகின்றார்.
“மறு விற்பனைக்காக” பொருளைப் பெறும் அல்லது வணிக நோக்கங்களுக்காக ஒரு பொருளை மற்றும் சேவையைப் பெறும் ஒரு நபரை இது உள்ளடக்கவில்லை.
இது நேரடிப் பரிவர்த்தனை, மின்னணு மூலம் நிகழ்நேரப் பரிவர்த்தனை, தொலைதூர வணிகம், பன்நிலை சந்தையிடல் அல்லது நேரடி விற்பனை ஆகிய அனைத்து முறைகள் மூலமான பரிவர்த்தனைகளையும் உள்ளடக்கியிருக்கின்றது.
நுகர்வோர்களின் உரிமைகள்
பின்வரும் உரிமைகள் உள்ளிட்ட 6 நுகர்வோர் உரிமைகளை இந்த மசோதா வரையறுக்கின்றது.
உயிர் மற்றும் சொத்துகள் ஆகியவற்றிற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றைச் சந்தைப்படுத்துதலுக்கு எதிராக பாதுகாப்பு அளித்தல்.
பொருட்கள் அல்லது சேவைகளின் பண்பு, அளவு, ஆற்றல் தூய்மைத் தன்மை, தரம் மற்றும் விலை ஆகியவை குறித்து நுகர்வோருக்கு அறிவித்தல்.
போட்டி விலையில் பலவிதமான பொருட்கள் அல்லது சேவைகளைப் பெறுவதை உறுதி செய்தல்.
நியாயமற்ற அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக தீர்வு காணுதல்.
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்
நுகர்வோர் உரிமைகளை ஊக்குவிக்க, பாதுகாக்க மற்றும் அமல்படுத்துவதற்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஒன்று அமைக்கப்படும்.
இது அத்தகைய விதிமீறல்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு பொது இயக்குநர் தலைமையில் ஒரு விசாரணைப் பிரிவைக் கொண்டிருக்கும்.
ஒரு தவறான விளம்பரத்திற்காக ஒரு உற்பத்தியாளர் அல்லது ஒப்புதல் அளிக்கக் கூடிய நபருக்கு ரூ.10 வரையிலான அபராதமும் சிறைத் தண்டனையையும் இது விதிக்கும்.
மேலும் இது தவறான விளம்பரப்படுத்துதலுக்கு ஒப்புதல் வழங்குநரை, அந்த குறிப்பிட்ட பொருள் அல்லது சேவைக்கு ஓராண்டு காலம் வரை அவர் ஒப்புதல் வழங்க தடை விதிக்கும்.
நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம்
மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் (Consumer Disputes Redressal Commission - CDRC) அமைக்கப்படும்.
மாவட்ட அளவில் வழங்கப்படும் குறைதீர்ப்பு ஆணையத் தீர்ப்பின் மேல்முறையீட்டை தேசிய அளவில் உள்ள ஆணையம் வரை கொண்டு செல்ல முடியும்.
இறுதியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.
பின்வருபவை தொடர்பாக புகார்களை அளிக்க முடியும்.
நியாயமற்ற அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகள்
குறைபாடுள்ள பொருட்கள் அல்லது சேவைகள்
அதிகமான விலை அல்லது ஏமாற்றும் வகையில் விலை நிர்ணயம் செய்தல்
உயிர் மற்றும் பாதுகாப்பிற்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குதல்.
அதிகார வரம்பு
மாவட்ட CDRC ஆனது சேவைகள் மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ. 1 கோடிக்கு மிகாமல் இருந்தால், அது குறித்தப் புகார்களை விசாரிக்கும்.
மாநில CDRC ஆனது ரூ. 1 கோடி முதல் ரூ. 10 கோடி வரை மதிப்பிலான பொருட்கள் அல்லது சேவைகள் குறித்தப் புகார்களை விசாரிக்கும்.
ரூ. 10 கோடிக்கு மேல் மதிப்பு கொண்ட பொருட்கள் அல்லது சேவைகள் குறித்தப் புகார்களை தேசிய CDRC விசாரிக்கும்.
பொருட்களுக்குப்பொறுப்புடைமை
குறைபாடுள்ள பொருட்களுக்குப் பொறுப்புடைமை என்பது ஒரு பொருள் அல்லது சேவையினால் நுகர்வோருக்கு ஏற்படும் எந்தவொரு தீங்கு மற்றும் பாதிப்பிற்காக, அவருக்கு ஈடு செய்வது, அந்தப் பொருளின் உற்பத்தியாளர் / சேவை வழங்குநர் / விற்பனையாளரின் பொறுப்பாகும்.
இழப்பீடு கோர, இந்த மசோதாவில் குறிப்பிட்டுள்ளவாறு குறைபாடு உள்ளதற்கான ஏதாவதொரு நிலையினை நுகர்வோர் நிரூபிக்க வேண்டும்.