பயிர்களைன் உற்பத்தி விலையின் 1.5 மடங்கு என்ற அளவிற்கு குறைந்தபட்ச ஆதார விலை (MSP – Minimum Support Price) நிர்ணயித்தலுடன் ஒன்றிப் பொருந்தும் வகையில் நெல், கோதுமை மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்ட 2019-20 ஆம் ஆண்டின் காரிப் மற்றும் ராபி காலப் பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
மத்திய அரசானது மாநில அரசுகள்/ சம்பந்தப்பட்ட மத்திய அரசுத் துறைகள் மற்றும் இதரக் காரணிகளைக் கருத்தில் கொண்டு, விவசாயப் பொருட்களின் விலைகளுக்கான ஆணையத்தின் பரிந்துரைகளின் (CACP - Commission for Agricultural Costs & Prices) அடிப்படையில் கோதுமை, பருப்பு, எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட 22 பயிர் வகைகளுக்கு MSPஐ நிர்ணயித்துள்ளது.
இது தவிர, டோரியா மற்றும் உறிக்கப்படாத தேங்காய் ஆகியவற்றிற்கான MSP ஆனது முறையே கடுகு, மற்றும் கொப்பரைத் தேங்காய் ஆகியவற்றின் MSP -யின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
CACP ஆனது MSP-ஐப் பரிந்துரைக்கும் போது பின்வருவனவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்கின்றது. அவையாவன உற்பத்தி விலை, உள்நாட்டு மற்றும் வெளி நாட்டுச் சந்தையில் பல்வேறு பயிர்களுக்கான ஒட்டு மொத்தத் தேவை மற்றும் விநியோக நிலை, உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு விலைகள், பயிர்களுக்கிடையேயான விலைச் சமநிலை, விவசாயம் மற்றும் விவசாயம் சாராத துறைகளுக்கிடையேயான வர்த்தக முறைகள், பொருளாதாரத்தின் விலைக் கொள்கையின் தாக்கம் (மற்ற துறைகளில்), நிலம், நீர் மற்றும் இதர உற்பத்தி வளங்களின் திறனுள்ள பயன்பாடு மற்றும் பயிரின் உற்பத்தி விலையை விட குறைந்த பட்சம் 50% அதிக வரம்பு ஆகியவையாகும்.
டாக்டர் எம்.எஸ். சுவாமி நாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையமானது பயிரின் சராசரி உற்பத்தி விலையை விட MSP ஆனது 50 சதவிகிதம் அதிகமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.