பருவநிலை மாற்றத்திற்கான தேசிய தகவமைப்பு நிதியத் திட்டத்தின் (National Adoption Fund for Climate Change) கீழ் பயிர் மீதங்களின் மேலாண்மை வழியே (Crop Residue Management) விவசாயிகளிடையே பயிர் வளர்ப்பில் பருவநிலை நெகிழ்ச்சித் திறனுடைமை (Climate Resilience Building) கட்டமைத்தல் மீதான பிராந்திய திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளரின் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற தேசிய வழிகாட்டு குழுவின் (National Steering Committee) சந்திப்பில் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இத்திட்டம் 100 கோடி ரூபாய் செலவீட்டில் பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
வேளாண் களங்களில் அறுவடை முடிந்த பிறகு மேற்கொள்ளப்படும் பசுந்தாள் எரிப்புகளால் (Stubble burning) உண்டாகும் பருவநிலை மாற்றங்களின் தாக்கங்கங்கள், சுற்றுச்சூழல் மீதான எதிர்மறை தாக்கங்களை தணிப்பதும், வேளாண்மையில் தகவமைப்பு திறனை (Adaptive Capacity) மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
வேளாண் களங்களில் மேற்கொள்ளப்படும் பசுந்தாள் எரிப்பானது உலக வெப்பமய மாதலுக்கு துணைபுரிவதோடு சுற்றுச்சூழலில் மாசுபாட்டையும் உண்டாக்கும். இதனால் மனித ஆரோக்கியம், மண்வளம், காற்றின் தரம் போன்றவற்றில் பாதக விளைவுகள் ஏற்படும்.
திறந்த வெளி பசுந்தாள் எரிப்புகளானது வளிமண்டல அடுக்கில் கார்பன் மோனாக்ஸைடு, கார்பன் டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்களோடு, நுண்துகள் மாசுக்களையும் (Particular Matters) வெளியிட வல்லது.
பருவநிலை மாற்றத்திற்காக தேசிய தகவமைப்பு நிதியம்
பருவநிலை மாற்றத் தகவமைப்பு திட்டங்களை மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் செயல்படுத்துவதற்காக அவற்றிற்கு மத்திய அரசால் வழங்கப்படும் 100 சதவீத மானியத் தொகையே 2015 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பருவநிலை மாற்றத்திற்கான தேசிய தகவமைப்பு நிதியமாகும்.
பருவநிலை மாற்றம் மீதான தேசிய செயல்திட்டத்தின் (National Action Plan on Climate Change) குறிக்கோள்களை முழுமைப்படுத்துவதற்காகவும், பருவநிலை மாற்றம் மீதான மாநில அரசுகளின் செயற்திட்டத்தை செயல்படுத்திடவும் இந்நிதியம் தோற்றுவிக்கப்பட்டது.
NAPCC ன் கீழ் நாடு முழுவதும் பருவநிலை மாற்றத் தகவமைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான பொறுப்புடைமையை கொண்ட தேசிய அமலாக்க நிறுவனமாக (NIE – National Implementation Agency) நபார்டு வங்கி (NABARD – ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண்மைக்கான தேசிய வங்கி) செயல்படுகின்றது.