பழங்குடியினக் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் மதிப்பீடு
August 23 , 2024 92 days 152 0
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழக மாநிலத்தில் 36 பழங்குடியின உட்பிரிவுகள் உள்ளனர்.
அந்தப் பிரிவுகளில் முக்கியப் பழங்குடியின சமூகத்தினர் மலையாளி, தோடர்கள், குரும்பர்கள், பனியர்கள், இருளர்கள், காட்டுநாயக்கர்கள், கணிக்கர்கள், பள்ளியர்கள் மற்றும் காடர் ஆகியப் பிரிவுகள் ஆகும்.
இவற்றுள் தோடர்கள், கோத்தர், குரும்பர்கள், கட்டுநாயக்கர்கள், பனியர்கள், இருளர்கள் ஆகியோர் ‘ஆதிகாலப் பழங்குடியினர்’ என்று குறிப்பிடப் பட்டுள்ளனர்.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்த மாநிலத்தின் ஒருங்கிணைந்தப் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்களின் மக்கள் தொகை ஆனது 7.94 லட்சமாக உள்ள நிலையில் இது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 1.10 சதவிகிதம் (இது 721 லட்சம்) ஆகும்.
7.94 லட்சம் பழங்குடியின மக்களில் 50.5 சதவீதம் பேர் ஆண்கள், 49.5 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து மாநிலத் திட்டக்குழு (SPC) விரிவான மதிப்பீட்டை மேற்கொண்டது.
அடிப்படை உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் கல்வி ஆகியவற்றில் பெரும் சவால்கள் நீடித்து காணப் படுவதனை இது கண்டறிந்தது.
அரசுப் பேருந்து சேவைகளின் நிகழ் நிலை மற்றும் எண்ணிக்கை ஆகிய இரண்டையும் அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த மலைப் பகுதிகளில் மாநில அரசின் பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணச் சேவைத் திட்டமானது கிடைக்கப் பெறுவதில்லை என்பதும் கண்டறியப் பட்டது.
கல்வியில் இடைநிற்றல் விகிதங்களைக் குறைக்கவும், மாணவர் சேர்க்கையை வெகுவாக அதிகரிக்கவும் அதிகப் பள்ளிகளை நிறுவி, தற்போதுள்ள உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டிய ஒரு அவசியமும் உள்ளது.
பழங்குடியினர் பகுதியில், அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் தவிர, அரசு அல்லது தனியார் தொழில்நுட்பப் பயிலகம் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் எதுவும் இல்லை.
பருவகாலம் காரணமாக ஒட்டு மொத்தக் குடும்பங்களும் வேலைவாய்ப்பிற்காக வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்வது அவர்கள் கல்வியை இடைநிறுத்துவதற்கு வழி வகுத்துள்ளது.
97 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகிய இரண்டையும் வைத்திருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
தோராயமாக 10 சதவீத குடும்பங்கள் தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளனர்.
85 சதவீதத்திற்கும் அதிகமானோர் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.
60 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் சாதிச் சான்றிதழ்களை வைத்து இருக்கின்றனர், அதே சமயம் சுமார் 15 சதவீதத்தினரிடம் மட்டுமே பழங்குடியினர் அடையாள அட்டைகள் உள்ளன.
பழைய மற்றும் பிரபலமான அரசு நலத் திட்டங்களைப் பற்றி அவர்கள் நன்கு அறிந்திருந்தனர் ஆனால் புதிய திட்டங்களைப் பற்றிய பெரும் ஒரு விழிப்புணர்வு அவர்களிடம் குறைவாகவே இருந்தது.